சமூக ஊடகமான ட்விட்டரின் இந்திய அளவிலான செயல்பாடுகள் வர்த்தகத்தை ஒருங்கிணைக்க புதிய மேலாண் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான ட்விட்டர் நிறுவன இயக்குநர் தரன்ஜீத் சிங் பதவி விலகி எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதிய மேலாண் இயக்குநர் பொறுப்பேற்க உள்ளார்.
பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டரை இந்தியாவில் மூன்று கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் ட்விட்டர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஏப்ரல் 29ம் தேதி முதல் டெல்லி அலுவலகத்திலிருந்து மணிஷ் மகேஸ்வரி, மேலாண் இயக்குநராக செயல்பட இருக்கிறார். மணிஷ், இதற்கு முன் நெட்வொர்க்18 டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இடைக்கால நிர்வாகியாக பொறுப்புவகித்த பாலாஜி கிருஷ், சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ட்விட்டர் சர்வதேச தலைமையகத்துக்குத் திரும்ப உள்ளார்.
ட்விட்டர் நிறுவன துணை தலைவரும் ஆசியா பசிபிக் பகுதிக்கான மேலாண்மை இயக்குநருமான மாயா ஹரியின் கீழ் மணிஷ் பணிபுரிய உள்ளார்.