இந்தியாவில் நான்கு நுகர்வோரில் மூன்று பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என்று அடோப் நிறுவனம் எடுத்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
இந்திய சந்தை குறித்து 2019 மொபைல் மார்க்கெட்டிங் ரிசர்ச் என்ற ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் என்னும் திறன்பேசியை பயன்படுத்தும் நுகர்வோர் குறித்த இந்த ஆய்வு, இந்தியாவில் ஒரு முழு வேலைநாளில் 90 விழுக்காடு நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களை நுகர்வோரில் நான்கில் மூன்று பங்கினர் பயன்படுத்துகின்றனர் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
இளம்தலைமுறையினரில் ஆண்கள், ஒரு சாதனம் மாற்றி மறு சாதனத்தை அதாவது மொபைல் போன், கணினி என்று பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் நேருகின்றன என்பதும் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்றோரில் மூன்றில் ஒரு பங்கினர் ஸ்மார்ட் போன் இல்லாமல் தங்களால் வாழவே இயலாது என்றும் 39 விழுக்காட்டினர் ஸ்மார்ட்போன் இல்லாமல் தினசரி வாழ்வில் பெரும் குழப்பம் நேர்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பதின்ம வயதினர் உள்ளிட்ட இளம்தலைமுறை நுகர்வோர் கம்ப்யூட்டரை காட்டிலும் ஸ்மார்ட்போன்களையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். 88 விழுக்காடு காணொளி அழைப்பு (வீடியோ காலிங்), 85 விழுக்காடு சமூகவலைதள பயன்பாடு (சோஷியல் மீடியா), 89 விழுக்காடு குறுஞ்செய்தி அனுப்புதல் (டெக்ஸ்டிங்) ஆகியவை இந்திய நுகர்வோரால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆய்வு இந்தியாவிலுள்ள 1,000 நுகர்வோர் மத்தியில் செய்யப்பட்டுள்ளது.
இணையம் மூலம் (ஆன்லைன்) பொருள்கள் வாங்கும் நுகர்வோரில் 83 விழுக்காட்டினர் வணிக நிறுவனங்களை தொடர்பு கொள்ள கணினியின் பிரௌஸரை காட்டிலும் மொபைல்செயலியையே பயன்படுத்துவதாகவும் அடோப் நிறுவனம் தெரிவித்துள்ளது.