மொபைல் போனை நீங்கள் தவறவிட்டுவிட்டாலோ, திருட்டுக் கொடுத்துவிட்டாலோ அதைக் கண்டுபிடிப்பதற்கான தரவுகளை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வழங்கவிருக்கிறது. சாதனங்கள் அடையாளங்களுக்கான மத்திய பதிவேடு (CEIR) உதவியுடன் போன் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.
ஐஎம்இஐ எண்
ஒவ்வொரு மொபைல் போனுக்கும் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (International Mobile Equipment Identity number) என்ற 15 இலக்க எண் உண்டு. போன் வாங்கும்போது அதன் உறையிலேயே அடையாள எண் கொடுக்கப்பட்டிருக்கும். இரட்டை சிம் (Dual SIM) உள்ள போன்களை பயன்படுத்துவது இப்போது வழக்கத்தில் உள்ளது. அது போன்ற மொபைல் போன்களுக்கு இரண்டு எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
புகார்
எந்த போன் திருடப்பட்டதோ அதற்கான அடையாள எண்ணை (IMEI) குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும்போது மத்திய தொலைதொடர்பு துறை, அந்த எண்ணுக்குரிய போனை தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கும். அப்போது எந்த தொலைதொடர்பு நிறுவனமும் அதற்கு சேவை வழங்க இயலாது. போனை திருடியவனால் அதை பயன்படுத்த இயலாது. அப்படிப்பட்ட எண்களிலிருந்து பேசப்படும் உரையாடலை சாதனங்கள் அடையாளங்களுக்கான மத்திய பதிவேடு (CEIR) மூலம் சட்டப்பூர்வமாக இடைமறித்து கேட்கவும் முடியும்.
எண்களுக்கான பட்டியல்
மத்திய அரசின் தரவுகள் வெள்ளை, சாம்பல் மற்றும் கறுப்பு என்று மூன்று விதங்களில் பட்டியலிடப்படும். வெள்ளை பட்டியலில் உள்ள எண்கள் பயன்பாட்டுக்கு உரியவை. கறுப்புப் பட்டியலில் உள்ளவை தொலைந்து அல்லது திருட்டில் போனவை, சாம்பல் நிற பட்டியலில் உள்ளவை நிலை உறுதிப்படுத்தப்படாத எண்கள். அப்படிப்பட்ட எண்களுக்கு சேவைநிறுவனங்கள் தொடர்பு வழங்கலாம். ஆனால், இதன் மூலம் செய்யப்படும் தொடர்பு விவரங்கள் கண்காணிப்பில் இருக்கும்.
எப்படி கண்டுபிடிப்பது?
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள அமைப்பு வசதிகள் மூலம் IMEI எண்ணை கண்டுபிடிக்கலாம். ஐஓஎஸ் இயங்குதளத்தில் Settings>General>About என்ற கட்டளைகளை பயன்படுத்தியும், ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள போன்களில் அமைப்பு செயலி (Settings app) மூலமும் இந்த எண்ணை கண்டுபிடிக்கலாம். ஸ்மார்ட்போனிலிருந்து *#06# என்ற எண்ணை டயல் செய்தால் IMEI எண், எந்த இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது, மாதிரி எண், எந்த சேவை நிறுவனம் தொடர்பு வழங்கியுள்ளது, எந்த நாட்டைச் சேர்ந்தது மற்றும் வாங்கிய தேதி போன்ற விவரங்களை இந்த எண் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
ஏன் முக்கியம்?
மொபைல் போனை ஃபிளிப்கார்ட் போன்ற வர்த்தக இணையதளங்கள் மூலம் விற்பதற்கும் இந்த எண் தேவை. அதன் மூலம் விற்பனையாளர் போன் வாங்கப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களையும், அது திருடப்பட்டதல்ல என்பதையும் உறுதி செய்துகொள்வார்கள்.
உதாரணமாக பிரிட்டனில் வாங்கிய போனை இந்தியாவில் விற்கவேண்டுமானால் மூல ரசீதை வழங்க வேண்டும். IMEI எண்ணை கொண்டு அது உங்கள் போன் என்று உறுதி செய்யப்படாவிட்டால் அதை விற்பனை செய்ய இயலாது.
தற்போது மத்திய அரசு தயாரிக்கவுள்ள சாதனங்கள் அடையாளங்களுக்கான மத்திய பதிவேடு (CEIR) போன்ற பதிவேடுகள் ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரிட்டன், அஸர்பெய்ஜன், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கும் இந்த தரவுபட்டியல் மூலம் திருடப்பட்ட மொபைல் போன்களை குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.