ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களின் பயனர்கள் செல்லுமிடங்கள் பற்றிய தகவல் தானாக அழிந்துவிடும் முறையை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்ற இடங்கள், பார்த்த இணையதளங்கள், பயன்படுத்திய செயலிகள் பற்றிய விவரங்கள் எவ்வளவு நாள்கள் கூகுளிடம் இருக்கலாம் என்று பயனரே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
கூகுள் நிறுவனம் பயனர்களின் இணையம் மற்றும் செயலி பயன்பாடு சார்ந்த தரவுகள், செல்லுமிட விவரங்களை அழிக்கக்கூடிய வசதியை அளிக்க இருப்பதாக கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. இணையம் மற்றும் செயலி பயன்பாட்டு தரவுகளை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்று தெரிவு செய்யும் வசதி கணினி சார்ந்த பயனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், செல்லுமிட விவரம் பற்றிய தகவலையும் அழிப்பதற்கான வசதி பயனர்களின் தனியுரிமைக்கான முக்கிய தேவையாக இருந்து வந்தது.
புதிய தனியுரிமை அமைப்பின்படி, தான் செல்லுமிடம் பற்றிய விவரங்களை கூகுள் மூன்று மாதங்கள், ஒன்றரை ஆண்டுகள் (18 மாதங்கள்) என்று எவ்வளவு காலத்திற்கு சேமித்து வைத்திருக்கவேண்டும் என்று பயனரே தெரிவு செய்துகொள்ளலாம். 'நான் அழிக்கின்றவரையில் தரவுகளை பாதுகாத்து வைக்கவும்' (keep data until I delete manually) என்ற தெரிவு எல்லோருக்கும் வைக்கப்பட்டிருக்கும். இதை பயனர் மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக 18 மாதங்கள் தரவுகளை வைத்திருக்க வேண்டும் என்பது பயனரின் தெரிவானால், அதற்கு முன்னர் அவர் சென்று வந்த இடங்களின் விவரங்கள் கூகுளில் இருக்காது.
பயனர் கணக்கின் அமைப்பு (Account settings) பகுதிக்குச் சென்று இணையம், செயலி முதல் யூடியூப், குரல் கட்டளை (வாய்ஸ் கமெண்ட்ஸ்) வரைக்கும் அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் தரவுகள் சேர்க்கப்படுவதற்கு (turning off all data collections) ஒப்புதல் அளிக்கக்கூடாது. கூகுள் அமைப்பில் (Google Settings) உங்கள் புகைப்படத்தின்மேல் சொடுக்கி தெரிவிற்குள் செல்ல முடியும்.
கூகுள் மூலம் இடம் கண்டறியும் மற்றும் தொலைந்து போன போனை கண்டறியும் சேவைகளை பயன்படுத்துவோரின் விவரங்கள் சேகரிக்கப்படும். இப்போது செல்லுமிட விவரங்கள் சேமிக்கப்படக்கூடாது என்ற தெரிவை செய்தாலும் முன்னர் சேமிக்கப்பட்டவை அழிக்கப்படாது. உங்கள் முந்தைய விவரங்களை maps.google.com/timeline என்ற இணைப்பில் சென்று அழித்துக்கொள்ளலாம்.