மின் வாகனங்களை சார்ஜ் செய்ய மூன்று தொழில்நுட்பங்கள்

Electronic Vehicles Charging Stations to use three technologies

by SAM ASIR, Jul 14, 2019, 11:00 AM IST

எலெக்ட்ரிக் கார் எனப்படும் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் (சார்ஜ்) அளிப்பதற்கு இந்தியாவில் மூன்று வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

தற்போது பாரத் ஸ்டேண்டர்ட் என்ற முறை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனுடன் வேகமாக மின்னூட்டம் அளிக்கக்கூடிய சாடிமோ (CHAdeMO)மற்றும் கம்பைண்ட் சார்ஜிங் சிஸ்டம் (CCS) ஆகிய நிறுவனங்களின் சேவையையும் அனைத்து பொது எரிபொருள் நிலையங்களிலும் அமைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.

மூன்று தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தக்கூடிய ஒரு நிலையம் அமைக்க 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பாரத் ஸ்டேண்டர்டு உடன் வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை சேர்ப்பதற்கு 10 முதல் 12 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால் எரிசக்தி அமைச்சம் இரண்டாவது முறையையே தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தது.

பாரத் ஸ்டேண்டர்ட் தொழில்நுட்பம் 72 முதல் 200 வோல்ட் வரையிலான குறைந்த மின்னழுத்த மின்னூட்டத்திற்கு மட்டுமே ஏற்றது. மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் மற்றும் அதேபோன்ற வாகனங்களை மட்டுமே சார்ஜ் செய்ய இயலும். சிசிஎஸ் மற்றும் சாடிமோ ஆகியவை 220 வோல்ட்டுக்கும் மேல் மின்னூட்டமளிக்கும் திறன் பெற்றவை. தற்போது அறிமுகமாகியுள்ள ஹூண்டாய் கோனா கார் மட்டுமே வேகமாக மின்னூட்டமளிக்கக்கூடியது. சாடிமோ தொழில்நுட்பம் மூலம் இதை சார்ஜ் செய்யலாம்.

தற்போது இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வேகமாக சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவையல்ல என்பதுடன் வேகமாக மின்னூட்டமளிப்பது அதிக செலவு பிடித்ததுமாகும். சர்வதேச அளவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 15 ஆம்பியர் இணைப்பை கொண்டே மின்னூட்டமளிக்கப்படுகின்றன.

எனர்ஜி எஃபிசியன்ஸி சர்வீசஸ் லிமிடெட் என்னும் நிறுவனம், டெல்லியில் தற்போது வாகனங்களுக்கான 55 மின்னூட்ட நிலையங்களை அமைத்துள்ளது. நொய்டா மற்றும் குருகிராமில் அநேக நிலையங்களை அமைக்க இருப்பதாகவும் இன்னும் மூன்று மாத காலங்களுக்குள் தலைநகர் டெல்லியில் 150 நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சௌரப் குமார், தற்போது மின்னூட்ட நிலையங்களில் ஓரிணைப்பு காலியாக உள்ளது. அதில் சிசிஎஸ் மற்றும் சாடிமோ ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இந்த மின்னேற்றிகள் ஆகஸ்ட் மாதம் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

More Technology News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை