கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அக்டோபர் 30ம் தேதி முதல் அனைத்து பயனர்களுக்குமான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தரவிறக்கம் செய்திருக்கும் பயனர்களுள் சிலர் இன்னும் அதை விளையாட முடிகிறது. இந்நிலையில் பப்ஜி மொபைல் இந்தியா என்ற புதிய விளையாட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.
பப்ஜி மொபைல் விளையாட்டுக்கான இந்தியப் பிரதிநிதியாக டென்சென்ட் கேம்ஸ் என்ற சீன நிறுவனம் இருந்து வந்தது. அந்நிறுவனம் இந்தியாவுக்கான பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது. தற்போது இந்தியச் சந்தைக்கேற்றபடி பிரத்யேகமாக பப்ஜி மொபைல் இந்தியா (PUBG Mobile India) என்ற புதிய விளையாட்டு வடிவமைக்கப்பட உள்ளது. இப்புதிய விளையாட்டில் பயனர்களின் தரவு பாதுகாப்பு அதிகரிக்கப்படும். உள்நாட்டின் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டிருக்கும். பயனர்களின் தரவுகள் பாதுகாப்பு குறித்து ஒழுங்கான தணிக்கை மற்றும் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடைகள், பயிற்சி மைதான வடிவமைப்பு உள்நாட்டுத் தேவைகளுக்கேற்றபடி இருக்கும் என்றும் பப்ஜி கார்போரேஷன் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இந்தியாவில் அலுவலகம் திறக்க இருப்பதாகவும் தெரிகிறது. பயனர்களின் தொடர்பு மற்றும் அவர்களுக்கான சேவையின் தரத்தை உயர்த்தும்வண்ணம் உள்நாட்டில் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய ரூ.746 கோடி முதலீடு செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது பப்ஜி மொபைல் இந்தியா விளையாட்டு பயன்பாட்டுக்கு வரும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை.