கடந்த திங்கட்கிழமை அன்று ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான அனுப் பகச்சி தெரிவிக்கையில், ஐசிஐசிஐ வங்கியின் சார்பில் "I Mobile pay" எனும் மொபைல் செயலி வெளியிடப்பட்டது. இந்த செயலியின் மூலம் அனைத்து விதமான வங்கி வாடிக்கையாளர்களும் யுபிஐ பேமெண்ட் அடிப்படையில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டது.
நாம் தற்போது பயன்படுத்தும் போன்பே மற்றும் ஜிபே செயலிகளைப் போன்றே இந்த "I Mobile pay" செயலியிலும் ஐசிஐசிஐ வங்கி மற்றும் பிற வங்கிகளின் கணக்குகளையும் இணைத்துக் கொள்ளலாம். பின்னர் இதற்கென ஒரு யுபிஐ எண் வழங்கப்படும் என்றும், அதனைப் பயன்படுத்தி பணம் அனுப்புதல் மற்றும் பணம் பெறுதல் போன்ற செயல்களில் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐசிஐசிஐ வங்கியின் அனைத்து விதமான சேவைகளையும் இந்த செயலியின் மூலம் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காலத்தில் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அளவு கணிசமாக உயர்ந்ததே வங்கிகளின் இந்த அதிரடிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் ஐசிஐசிஐ வங்கியைத் தொடர்ந்து, இம்மாதிரியான யுபிஐ பேமெண்ட் முறையில் களமிறங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி.
எஸ்பிஐ வங்கியானது இந்தியாவின் மிகப்பெரிய தேசியமயமாக்கப்பட்ட வங்கியாகும். இதன் வாடிக்கையாளர் வட்டம் மிகப்பெரியது. எனவே எஸ்பிஐ வங்கியின் தற்போதைய செயலியான "YONO" செயலியை அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்து திட்டமிட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கியின் மேலாண்மை இயக்குநரான CS Shetty தெரிவித்துள்ளார். இந்த மேம்படுத்தப்பட்ட செயலி இன்னும் 30 நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ வங்கி மட்டும் அல்ல இம்மாதிரியான செயலிகளைப் புதிதாக உருவாக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள செயலியை மேம்படுத்துதல் வேலையில் ஆக்சிஸ் வங்கியும் இறங்கியுள்ளது. வங்கிகள் மட்டுமல்லாமல் வங்கி சாராத நிறுவனங்களும் , யுபிஐ பேமெண்ட் மூலம் மற்ற வங்கியின் வாடிக்கையாளர்களைக் கவுர களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.