நெருங்கிய நண்பர்களுடன் நெருக்கம் கூட இன்ஸ்டாகிராமில் புதிய வசதி!

Instagram Close Friends announced: Stories with select people

by SAM ASIR, Nov 30, 2018, 19:47 PM IST

ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடம் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. ஒரே வாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறோம். ஆனால், எல்லாவற்றையும் எல்லோரோடும் நாம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. அனைவரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. இன்ஸ்டாகிராமும் தற்போது அதை உணர்ந்துள்ளது.

பயனர்கள், தங்களது தனிப்பட்ட தகவல்களை மிகவும் வேண்டப்பட்ட, நெருக்கமான சிலரோடு மட்டும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பெறுவதற்கு இன்ஸ்டாகிராம் செயலியின் புதிய ஆப்பை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கின்ற பதிப்பில் மாற்றங்களை மேம்படுத்திக் (update) கொள்ள வேண்டும்.

நூறு கோடிக்கும் (1 பில்லியன்) அதிகமான பயனர்கள் இன்ஸ்டாகிராமில் தங்கள் தனிப்பட்ட புகைப்பட தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். பயனர்களுக்கான சேவையின் தரத்தை உயர்த்தும் வண்ணம், 'நெருங்கிய நண்பர்கள்' (Close Friends) என்ற அம்சத்தை இன்ஸ்டாகிராம் தற்போது சேர்த்துள்ளது. இந்த புதிய வசதியை பயன்படுத்தி, நெருங்கிய நட்பு வட்டாரத்திற்கு மட்டும் நீங்கள் விரும்பும் புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
இதுபோன்ற வசதி முகநூலில் இருந்தபோதும், இன்ஸ்டாகிராமில் இப்போதுதான் சேர்க்கப்பட்டுள்ளது. பதிவுகள், 'பொது' (Public), 'தனிப்பட்டது' (Private), 'நெருங்கிய நண்பர்கள்' (Close Friends) என்று வகைப்படுத்தப்பட முடியும்.

நெருங்கிய நண்பர்களின் கணக்குகளை தொகுத்து உங்களுக்கென ஒரு வட்டத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். நண்பர்களுக்கு மட்டுமான இடுகைகளை அதில் பதிவு செய்யலாம்.இந்த வசதி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் கிடைக்கிறது.

புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?

உங்களது இன்ஸ்டாகிராம் கணக்குக்கு (Profile) செல்லுங்கள். அங்கு பக்கப்பட்டியில் (side menu) நெருங்கிய நண்பர்கள் என்ற பிரிவு காணப்படும். அதில் சொடுக்குங்கள் (tap). உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். அதில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு யாரும் கோரிக்கை வைக்க இயலாது. புதிய இடுகைகளை பதிவு செய்யும்போது, நெருங்கிய நட்பு வட்டம் என்ற பட்டியலோடு அதை பகிர்ந்து கொள்ள முடியும். யாராவது உங்களை தங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில் இணைத்திருந்தால், அவர்கள் இடுகைகளை நீங்கள் பார்க்கும்போது, பச்சை நிற வளையம் ஒன்றை நீங்கள் காணக்கூடும். அவர்களது இடுகை பட்டியலில், சுயவிவர புகைப்படத்தைச் சுற்றிலும் பச்சை நிற வளையமும் தெரியும்.

இன்ஸ்டாகிராமில் இதயத்திற்கு நெருக்கமான நண்பர்களோடு மட்டும் உங்கள் பதிவுகளை பகிர்ந்து இன்புறுங்கள்.

You'r reading நெருங்கிய நண்பர்களுடன் நெருக்கம் கூட இன்ஸ்டாகிராமில் புதிய வசதி! Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை