கட்டியிருப்பவரின் இதய துடிப்பை கண்காணித்து, அதில் குளறுபடி காணப்பட்டால் எச்சரிக்கக்கூடிய 'சீரிஸ் 4' ஆப்பிள் கைக்கடிகாரம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதய செயல்பாட்டை கண்காணிக்கக்கூடிய அம்சங்கள் அடங்கிய 'சீரிஸ் 4' ரக கைக்கடிகாரங்களை செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. இப்போது, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக துறை இந்தக் கைக்காடிகாரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த 'ஆப்பிள் வாட்ச்' கட்டியிருப்பவரின் இதய துடிப்பை அவ்வப்போது கண்காணிக்கும். அதில் படபடப்பு காணப்பட்டால், மூளையில் அடைப்போ அல்லது வேறு உடல்நல குறைபாடுகளுக்கோ காரணமாகக் கூடிய நிலையை இந்த கைக்கடிகாரம் உணர்ந்தால் உடனடியாக அது குறித்து எச்சரிப்பு கொடுக்கும். ஒரு மணி நேரம் ஐந்து நிமிட கால இடைவெளியில் ஐந்து முறை செய்யப்படும் கண்காணிப்பில் வேறுபாடு காணப்பட்டால் அது எச்சரிக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இதய செயல்பாட்டில் குறைபாடு உள்ளதற்கான அறிகுறி காணப்பட்டால், பயனர்கள் எலக்ட்ரோகார்டியோகிராம் என்னும் இசிஜியை எடுத்து மருத்துவரோடு அதை பகிர்ந்து கொள்ளலாம்.
சமீபத்தில் வந்துள்ள சீரிஸ் 4 ரக ஆப்பிள் கைக்கடிகாரத்தில் இந்த வசதி உள்ளது. ECG என்னும் செயலி, இலவசமாக தரவிறக்கம் செய்யவும் கிடைக்கிறது. 2016ம் ஆண்டில் வெளிவந்த சீரிஸ் 1 ரகம் முதலான கைக்கடிகாரங்களில் இதை பயன்படுத்தலாம். 2015ம் ஆண்டு ஆப்பிள் வாட்ச்களில் இந்த மென்பொருள் இயங்காது.
தற்போது அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது என்பது சற்று கசப்பான உண்மை!