வாட்ஸ்அப் செயலியை டெஸ்க்டாப் என்னும் மேசைகணினியிலும் பயனர்கள் பயன்படுத்த முடியும். க்யூஆர் (QR Code) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மேசைக்கணினியில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த முடியும்.
web.whatsapp.com என்ற இணையதளம் ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்பட்ட அனைத்து செய்திதுணுக்குகளையும் மேசைக்கணினியில் பார்த்திட வழி செய்கிறது. எழுத்து வடிவ செய்தி மட்டுமல்ல, வீடியோ என்னும் ஒளிக்கோவை மற்றும் புகைப்படங்களையும் மேசைக்கணினியில் பார்க்கலாம்.
படத்திற்குள் படம் (PiP) என்னும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. மேசைக்கணினியில் தற்போது பகிரப்பட்ட ஒளிக்கோவை (வீடியோ)களுக்கு மட்டுமே இந்தப் புதிய வசதி கிடைக்கிறது. ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட ஒளிக்கோவைகளும் விரைவில் இந்த புதிய வசதியில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் வெப் உடன் உங்கள் ஸ்மார்ட்போனை இணைப்பதற்கான வழிமுறைகள் உங்கள் மேசைக்கணினியிலுள்ள உலாவி (browser) யில் web.whatsapp.com என்ற இணையதளத்தை திறக்கவும். ஸ்மார்ட்போனில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை திறந்து, பட்டியலிலுள்ள (Menu) WhatsApp Web என்ற பகுதிக்குச் செல்லவும்.
மேசைக்கணினியிலுள்ள உலாவியில் தோன்றும் க்யூஆர் குறியீட்டை, உங்கள் போனில் வாட்ஸ்அப் செயலியினுள் உள்ள ஸ்கேனரால் ஸ்கேன் செய்யவும்
மேசைக்கணினியிலுள்ள வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறுவதற்கு லாக் அவுட் (logout from all computers) என்ற கட்டளையைபயன்படுத்தவும்.
ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்த இரண்டுக்கும் போதிய தரவிறக்க வேகத்துடன் இணைய இணைப்பு தேவை. 'கணினி இணைக்கப்படவில்லை' (Computer not connected) என்ற செய்தி தோன்றுமாயின், உங்கள் மேசைக்கணினிக்கு இணைய இணைப்பு போதுமான வேகத்தில் இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும்.