லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மேலும் 2 பேர் சிறையில் அடைப்பு..

two more persons arrested in Trichy jewelery robbery case

by எஸ். எம். கணபதி, Oct 6, 2019, 09:01 AM IST

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வி.எம்.சி. காம்பளக்ஸ் என்ற 3 மாடிக் கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரி உள்ளது இந்த கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும் கொள்ளை நடந்தது.

கடையின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தும் கொள்ளை போனது.
கடையை சுற்றி 5 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் உள்ளது. இடது பக்க சுற்றுச்சுவருக்கு உள்ளே கடையின் சுவரில் ஒரு ஆள் நுழையும் வகையில் துளை போட்டு அதன் வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.


கொள்ளை சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் சென்னையில் இருந்து நகைக்கடை உரிமையாளர் கிரண்குமார் நேற்று பிற்பகலில் திருச்சிக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் 800 நகைகள் தான் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின நகைகள் என தரைத்தளத்தில் உள்ள அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. முதல் தளம் மற்றும் 2-வது தளத்தில் நகைகள் கொள்ளை போகவில்லை. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.13கோடி இருக்கும் என்று தெரிவித்தார்
போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா, கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் கோபாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த லலிதா ஜுவல்லரியில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

இதன்பின்னர், திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது மோட்டார் பைக்கில் வந்த திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன்(34) மீது சந்தேகப்பட்டு நிறுத்தினர். அப்போது, போலீசாரை கண்டதும் மோட்டார் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் (28) தப்பி ஓடினான். மணிகண்டனிடம் இருந்து 4 கிலோ 250 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவந்தது.
மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ் (28) உள்பட 8 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், கொள்ளையடித்த நகைகளை பங்கு பிரித்து கொண்டு மோட்டார் பைக்கில் சென்றபோது சிக்கி கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். அங்கு சுரேஷின் தாய் கனகவள்ளியை(57) பிடித்து விசாரித்தபோது, கொள்ளையடித்த நகைகளில் 450 கிராம் அவரிடம் இருந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மணிகண்டன், கனகவள்ளி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் திருவாரூரில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இருவரையும் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை வரும் 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டார்.

இதையடுத்து மணிகண்டன் திருச்சி மத்திய சிறையிலும், கனகவள்ளி காந்திமார்க்கெட் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

You'r reading லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மேலும் 2 பேர் சிறையில் அடைப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tiruchirappalli News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை