அமெரிக்கா - இந்தியர்களை விரட்டும் புதிய விதி!

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் சேவை துறை (USCIS) புதிதாக ஒரு விதியை அறிவித்துள்ளது.

USCIS

இதன்படி, அமெரிக்காவில் விசா பெற்று வசிப்பவர்கள், விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ, அமெரிக்காவில் தங்கியிருக்க குறிக்கப்பட்டிருந்த காலம் நிறைவு பெற்றாலோ அந்த நபர்கள், அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட வகை செய்யப்பட்டுள்ளது.

விசா நீட்டிப்புக்காக செய்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட நபருக்கு 'முன்னிலையாக அறிவிக்கை' அனுப்பும் விதி ('Notices to Appear' - NTA)2018 ஜூன் 28-ம் தேதி கொள்கை முடிவாக வெளியாகியுள்ளது. இதன்படி, அந்த நபர் குடிபுகல் நீதிபதியின் முன்பு குறிப்பிட்ட நாளில் ஆஜராக வேண்டும்.

இதன்படி, மோசடி மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டோருடன், விசா நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோருக்கும் 'முன்னிலை அறிவிக்கை' அனுப்பப்பட உள்ளது. முன்பு குடியேற்றம் மற்றும் குடிபுகல் சேவை துறை, தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் குறிப்பிட்ட நபரை குறித்து குடிபுகல் மற்றும் சுங்க துறையிடம் (ICE) ஆலோசித்து, 'முன்னிலையாக அறிவிக்கை' அனுப்புவது நடைமுறையாக இருந்து வந்தது.

தற்போதைய விதியின்படி, குடிபுகல் மற்றும் சுங்க துறையின் ஆலோசனை இல்லாமல், குடியேற்றம் மற்றும் குடிபுகல் துறையே இந்த அறிவிக்கையை அனுப்ப முடியும்.

சூழ்நிலை:

ஹெச்-1பி (H1-B) விசாவின் உண்மையான காலம் முடிந்தபிறகு 240 நாள் பணி அனுமதியில் இருப்பார். இப்போது விசா நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

முன்பு:

பணியாளர் உடனடியாக இந்தியா திரும்பலாம். அவருக்கு பணி வழங்கும் நிறுவனம் அடுத்த விசா விண்ணப்ப காலத்தில் புதிதாக ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும்.

H-1B Visa

கடந்த ஆண்டு (செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடியும் 12 மாத காலத்தில்) அமெரிக்க அதிகாரிகள் 3.65 லட்சம் ஹெச்-1பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி அளித்தனர். அவற்றுள் 1.08 லட்சம் (29.5%) பேர் மட்டுமே புதிய ஆரம்ப நிலை விண்ணப்பதாரர்கள். ஏறத்தாழ 2 லட்சம் பேர் பணியில் தொடர்வதற்காக விசா பெற்றவர்கள்.

இப்போது:

குடிபுகல் நீதிபதி முன்பு முன்னிலையாகும்படி அமெரிக்க அதிகாரிகள் அறிவிக்கை அனுப்பலாம். இது வெளியேற்றுவதற்காக நடவடிக்கையின் முதற்படியாகும்.

விசா சம்மந்தப்பட்ட பணியாளர், அந்த விசாரணைக்காக அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும். அந்நிலையில் அவர் வெளியேறிவிட்டால், அமெரிக்காவுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் நுழைய தடை விதிக்கப்படும் (தான் வெளியேற அனுமதிக்கும்படி அவர் நீதிமன்றத்தை நாடலாம்)

விசா நீட்டிப்பு மறுக்கப்படும் நாளிலிருந்து அவர் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் நாளாக கணக்கிடப்படும். அது கடுமையான பின்விளைவுகளை கொண்டுவரும். ஓராண்டு காலத்திற்கு மேல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போருக்கு, மீண்டும் அமெரிக்காவுக்கு வருவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம்.

அமெரிக்காவின் இந்தப் புதிய விதி, ஹெச்-1பி விசா நீட்டிப்பை விரும்பும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கே பாதகமாக முடியும்.

Advertisement