ஏவுகணைகளை விண்ணில் திறம்பட செலுத்த உதவும் விகாஸ் இன்ஜினின் சோதனை, வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருக்கும் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் தான் இந்த சோதனை 195 நொடிகளுக்கு நடந்துள்ளது என இஸ்ரோ இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி 3 ஆகிய ஏவுகணைகளை திறம்பட விண்ணில் செலுத்த இந்த இன்ஜின் பயன்படுத்தப்படும்.
இந்த இன்ஜின் மூலம் மேற்குறிப்பிட்டுள்ள ஏவுகணைகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘விகாஸ் இன்ஜின் சோதனை ஓட்டம் கிட்டத்தட்ட 195 நொடிகளுக்கு நடத்தப்பட்டது. சோதனையின் போது, கணிக்கப்பட்ட முடிவுகளை வெற்றிகரமாக எட்டப்பட்டது’ என்று இஸ்ரோ கூறியுள்ளது.
விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றியடைந்ததை அடுத்து, இந்த ஆண்டு பிற்பகுதியில் விண்ணில் ஏவப்பட உள்ள ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட்டை செலுத்த பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜிசேட் 29 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் எடுத்துச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.