இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அதிபராக நாளை பதவியேற்கிறார்.
இலங்கையில் அதிபர் சிறிசேனா பதவிக்காலம் ஜனவரி 9ம் தேதி முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. ஒரேயொரு இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அதில் உயிரிழப்பு ஏற்படவில்லை. மற்றபடி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே(70), ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணசிங்கே பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா போட்டியிட்டனர். மொத்தம் 35 பேர் வரை போட்டியிட்டாலும், இந்த இருவருக்கு இடையில்தான் நேரடி போட்டி நிலவியது.
மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது ராணுவச் செயலாளராக இருந்தவர் கோத்தபய ராஜபக்சே. அப்போதுதான், விடுதலைப் புலிகளுடன் இறுதிப் போர் நடைபெற்றது. அந்த போரில் ராணுவத்தை வழிநடத்திய கோத்தபய ராஜபக்சே, அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றி கவலைப்படவே இல்லை. எப்படியாவது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கொன்று விட வேண்டுமென்று இறுதிவரை நின்றார். இதனால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். ஆனாலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த விடுதலைப் புலிகளின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்ததால், சிங்களர்களிடையே ராஜபக்சேவுக்கு ஆதரவு இருக்கிறது.
மேலும், கடந்த ஏப்ரலில் இலங்கை சர்ச்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 269 பேர் வரை கொல்லப்பட்டனர். இதனால், தீவிரவாதத்திற்கு எதிராக மக்கள் இருப்பது கோத்தபயவுக்கு சாதகமாக அமையும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டது. அதே போல், கோத்தபயவுக்கு சிங்களர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. தமிழர்கள் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.
வாக்கு எண்ணிக்கை முடிவில், கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்து 60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 52.25 சதவீத வாக்குகளை கோத்தபய ராஜபக்சே பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக நாளை(நவ.18) பதவியேற்க உள்ளார்.