மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் மன இறுக்கம் ஏற்படுமாம்.... மனிதர்கள் தங்களது மன இறுக்கத்தைப் போக்க மது அருந்துவது, புகை பிடிப்பது என பல்வேறு 'போதை' வழிகளைக் கையாளுகின்றனர். ஆனால் விலங்குகள் என்ன செய்யும்....? போலந்து நாட்டில் வார்சோ என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு 4 ஆப்பிரிக்க யானைகள் இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இந்த யானைகள் மிகவும் உற்சாகமாக இருந்தன. இந்நிலையில் இதில் எர்சா என்ற பெண் யானை கடந்த 5 மாதங்களுக்கு முன் திடீரென இறந்தது. இதன் பின்னர் மற்ற 3 யானைகளின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டதை மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் கவனித்தனர்.
முன்பை போல அந்த யானைகளுக்கு அதிக உற்சாகம் இல்லை. மிருககாட்சி சாலை டாக்டர்களும் யானைகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தான் எர்சா யானை இறந்ததால் மற்ற யானைகளுக்கு மன இறுக்கம் ஏற்பட்டுள்ளதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றின் மன இறுக்கத்தை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் மனிதர்கள் போல யானைகளுக்கும் போதைப் பொருள் ஏதாவது கொடுக்கலாமா என்ற யோசனை வந்தது.
இறுதியில் கஞ்சா கொடுத்து பார்க்க தீர்மானிக்கப்பட்டது. கஞ்சாவை அப்படியே கொடுக்காமல் அதிலிருந்து பிரித்தெடுக்கும் திரவ வடிவிலான சி பி டி எண்ணையை கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த சில வாரங்களாக யானைகளுக்கு இந்த கஞ்சா எண்ணை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் மன இறுக்கத்துடன் காணப்படும் மற்ற விலங்குகளுக்கும் கஞ்சா கொடுக்க மிருககாட்சி சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.