கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் 10 நாட்கள் வீடுகளின் முன் பூக்களால் கோலமிடுவது உண்டு. இதற்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் பெரும்பாலும் கேரளாவுக்கு பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் இருந்து கிடைக்கும் பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரும் பூக்களை பயன்படுத்தினால் அதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உண்டு என்றார். இதையடுத்து தமிழ்நாடு உட்பட வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வர கேரள தலைமை செயலாளர் தடை விதித்து உத்தரவிட்டார்.
கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரள பூ வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டுவர இருந்த தடையை கேரள அரசு நீக்கியுள்ளது. இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறியது:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பூ வியாபாரிகள் 'கோவிட் 19 கேரளா ஜாக்ரதா' என்ற இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பூ விற்பனை செய்பவர்கள் கொரோனா நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக அகலத்தை கடைப்பிடிக்கவேண்டும். பூக்களை விற்பனை செய்தவுடன் கைகளை கழுவ வேண்டும். விற்பனை முடிந்த பின் பூக்கள் கொண்டு வரும் கூடைகளை எரித்துவிட வேண்டும். விற்பனை செய்யும்போது நெருக்கமாக நின்று கொண்டு விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.