96 ஆவது வயதில் பட்டம் பெற்ற தாத்தா..!

by Nishanth, Sep 5, 2020, 12:17 PM IST

படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று பலரும் நிரூபித்துள்ளனர். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மாள் என்ற 105 வயதான மூதாட்டி நாலாவது வகுப்பில் தேர்வாகி சாதனை படைத்தார். இந்நிலையில் இதை விட ஒரு படி மேலே சென்று இத்தாலியை சேர்ந்த 96 வயதான ஒரு தாத்தா பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து சாதனை புரிந்துள்ளார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜுசேப்பே பாட்டெர்னோ என்ற இந்த முதியவர் தான் தற்போது உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளார். இந்த தள்ளாடும் வயதில் இத்தாலியிலுள்ள பாலேர்மோ பல்கலைக்கழகத்திலிருந்து சரித்திரம் மற்றும் தத்துவ அறிவியலில் இவர் பட்டம் பெற்றுள்ளார்.

இத்தாலியில் மிக அதிக வயதில் பட்டம் பெறும் நபர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. கடற்படை வீரரான இவர், இரண்டாம் உலகப் போரிலும் பங்கேற்றுள்ளார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இவர் பின்னர் ரயில்வேயில் பணியில் சேர்ந்தார். இளம்பருவத்தில் அதிகமாக படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் ஜுசேப்பேவின் அந்த ஆவல் நிறைவேறவில்லை. தனது அந்த இளமைக் கனவை 90 வயதுக்குமேல் இப்போது இவர் நிறைவேற்றியுள்ளார். 2017ல் ஜுசேப்பே பட்டப்படிப்புக்கு பதிவு செய்தார். மூன்று வருட பட்டப் படிப்பை இந்த தாத்தா எப்படி முடிக்கப் போகிறாரோ என்ற கவலை பலருக்கும் இருந்தது.

ஆனால் அந்தக் கவலை எல்லாம் தனக்கு இல்லை என நிரூபித்து உற்சாகமாக படித்து பட்டம் பெற்றுள்ளார். தனது படிப்பிற்கு தேவையான விஷயங்களை கூகுளில் தேடுவதை விட புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதில் தான் ஜூசேப்பேவுக்கு ஆர்வம் அதிகம். தினமும் காலை 7 மணிக்கு படிப்பதற்காக எழுந்து விடுவார். மதியத்திற்கு பின்னர் சிறிது ஓய்வெடுத்து விட்டு மாலையில் படிக்க தொடங்கினால் நள்ளிரவு வரை புத்தகங்களை கீழே வைக்க மாட்டார். இந்த தள்ளாடும் வயதில் எதற்கு இந்த வீண் வேலை என்று நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் பலமுறை இவரிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் எனது கனவு அவர்களுக்கு தெரியாது அல்லவா என்று புன்னகைத்தபடி கூறுகிறார் இந்த முதியவர். படிப்பை முடிக்கும் சமயத்தில் கொரோனா இடையில் புகுந்து இடையூறு செய்த போதிலும் அதைப் பற்றி எல்லாம் இந்த முதியவர் கவலைப்படவில்லை. தன்னிடம் இருந்த லேப்டாப்பை பயன்படுத்தி ஆன்லைன் வகுப்பிலும் கலந்து கொண்டு வந்தார். தன்னுடைய கடும் சிரமத்தின் பலனாக தனக்கு கிடைத்த பட்டத்தை பார்ப்பதற்கும், இந்த மகிழ்ச்சியை பங்கிடுவதற்கும் மனைவி இல்லையே என்ற வருத்தம் இவருக்கு இருக்கிறது. 14 வருடங்களுக்கு முன்பு ஜுசேப்பேவின் மனைவி மரணமடைந்தார். பட்டம் மட்டுமல்ல, முதுகலை பட்டமும் பெற முடிவு செய்திருப்பதாக நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்த இளம் முதியவர் ஜுசேப்பே.

READ MORE ABOUT :

More World News

அதிகம் படித்தவை