கடந்த வாரம் அமெரிக்கா பிலடெல்பியாவில் ஸ்டார்பக்ஸ் உணவகத்தில் கறுப்பினத்தவர் இருவர் கைது செய்யப்பட்டனர். அத்துமீறி நுழைந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாக பிலடெல்பியா காவல் ஆணையர் ரிச்சர்ட் ராஸ், முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்துப் போராட்டங்கள் நடைபெற்றன. ஸ்டார்பக்ஸ் நிறுவனம், நடைபெற்ற சம்பவத்திற்கு தனது இணையதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளதோடு, தங்கள் நிறுவனம் இனவெறிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது என்றும் தெரிவித்துள்ளது.
எந்த ஆர்டரும் கொடுக்காமல் நீண்ட நேரம் உணவகத்தில் இருந்ததால், உணவக மேலாளரான பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், தங்கள் நண்பருக்காக காத்திருந்த வேளையில் காவல்துறையினர் தங்களை கைது செய்ததாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி பரவ ஆரம்பித்த நேரத்திலிருந்து தொடர்ந்து தன் வருத்தங்களை பதிவு செய்து வந்ததோடு, கடந்த திங்கள்கிழமை, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "நடந்த சம்பவம் தவறானது; கண்டிக்கத்தக்கது. இனி இதுபோன்றவை நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்ததோடு, அவர்களை நேரடியாக சந்தித்து வருத்தம் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் ஸ்டார்பக்ஸ் தலைமை செயல் அதிகாரி கெவின் ஜாண்சன் கூறினார்.
"2018-ல் இனப்பாகுபாடு எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். ஸ்டார்பக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது மட்டும் போதாது," என்று கருத்து தெரிவித்துள்ள பிலடெல்பியா மேயர் ஜிம் கென்னி, "ஸ்டார்பக்ஸின் நடைமுறை, விதிமுறைகள் பற்றியும், காழ்ப்புணர்ச்சி இல்லாமல் நடந்து கொள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அவசியமா?" என்று ஆய்வு செய்யும்படி, பிலடெல்பியா மனித உரிமைகள் ஆணையத்தை கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
ஸ்டார்பக்ஸில் கழிப்பறையை உபயோகிக்க கட்டுப்பாடுகள் இல்லையெனினும், போக்குவரத்து அதிகமான பகுதிகளில் உள்ள கிளைகளில், கழிப்பறையை பயன்படுத்த ரசீதில் உள்ள குறியீட்டு எண் தேவை என்ற நிலை உள்ளது. இந்த சம்பவத்திலும் வாடிக்கையாளர்கள் கழிப்பறைக்கான குறியீட்டு எண்ணை கேட்டதினால் பிரச்னை எழுந்ததாக தெரிகிறது.
கடந்த திங்களன்று குறிப்பிட்ட ஸ்டார்பக்ஸ் கிளை முன்பு போராட்டம் செய்தவர்கள் மழையின் மத்தியில் ஒதுங்குவதற்கு நிர்வாகம் அனுமதித்தது எனவும், நடந்த சம்பவம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலாளர் தற்போது அந்தக் கிளையில் பணியாற்றவில்லையென்றும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஜேமி ரைலி தெரிவித்துள்ளார்.