அமெரிக்காவில் சீக்கியர் ஒருவரை தாக்கி, கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இத்தாக்குதலை நடத்திய இளைஞர்கள், அந்த 71 வயது முதியவரை அவமதிக்கும் விஷயங்களையும் செய்தனர். இதுதொடர்பாக, கலிபோர்னியா யூனியன் சிட்டி காவல்அதிகாரி மகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியா, மாண்டேக்காவில் ஆகஸ்ட் 6 அன்று அதிகாலை இச்சம்பவம் நடந்துள்ளது. சாஹிப் சிங் நட் என்ற அந்த முதியவர் சாலை ஓரமாக நடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. அவருக்கு எதிர்திசையிலிருந்து இரு நபர்கள் வருகின்றனர். இருவரும், தலையை மறைக்கும்வண்ணமான ஆடையை அணிந்துள்ளனர்.
வந்தவர்கள் ஏதோ பேச, சற்று நின்ற சாஹிப் சிங், பின்பு தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கிறார். இரு நபர்களும் அவரை தொடர்ந்து சென்று பேச்சு கொடுக்கின்றனர். பேசிக்கொண்டிருக்கும்போதே, இருவரில் ஒருவன் சாஹிப் சிங்கை வயிற்றில் உதைக்கிறான். முதியவரான அவர் சாலை ஓரம் விழுகிறார். தலைப்பாகை கழன்று விழுகிறது.
சாஹிப் சிங் எழுவதற்கு முயற்சிக்கும்வேளையில், ஒருவன் வந்து திரும்பவும் அவரை உதைக்கிறான். பிறகு அவரது முகத்தின்மேல் துப்பி விட்டு நடக்கிறான். சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒருவன் ஓடி வந்து அவரை தலையின் அருகே மூன்று முறை மிதித்து விட்டு, துப்பிவிட்டு செல்கிறான்.
கண்காணிப்பு காமிராக்களில் பதிவான இக்காட்சிகள் மற்றும் சம்பவம் குறித்து சாட்சி கொடுத்தவர்களின் தகவல்களின் உதவியோடு காவல்துறை இருவரை கைது செய்துள்ளது. டைரோன் மெக்அலிஸ்டர் (வயது 18) என்ற இளைஞனுடன் 16 வயது சிறுவன் ஒருவனும் புதன்கிழமை கைது செய்யப்பட்டான். டைரோன் மெக்அலிஸ்டர், யூனியன் சிட்டி காவல்அதிகாரி டாரில் அலிஸ்டரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இது இனவெறி தாக்குதலா என்ற வகையிலும் விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து, யூனியன் சிட்டி காவல்துறை முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், இந்தக் கொடிய குற்றத்தை செய்தவர்களுள் ஒருவன் தன் மகன் என்பதை அறிந்து மிகவும் வருந்துவதாக டாரில் அலிஸ்டர் கூறியுள்ளார். பல மாதங்களுக்கு முன்பே அவனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும், தன்னுடைய மற்ற இரு பெண்களையும் போல இவனையும் நன்றாகவே வளர்த்ததாகவும், மகனுடைய நடத்தை தமக்கும் மனைவிக்கும் தரும் மனவேதனையை வார்த்தைகளால் கூற இயலாது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி, குடியரசு கட்சி வேட்பாளர் ஜெஃப் டென்ஹாமுக்காக பரப்புரை பதாகைகளை வைத்துக்கொண்டிருந்த சுர்ஜித் மால்ஹி (வயது 50) என்ற சீக்கியர்மேலும் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.