லாஸ் ஏஞ்சல்ஸில் நடிகையை சுட்டுக் கொன்ற போலீஸ்!

Sep 2, 2018, 14:25 PM IST

அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டிய நடிகையை காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பஸடேனாவின் தென்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

Actress Vanessa Marquez

வனேஸா மார்குஸ் (வயது 49), அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர் ("ER") ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் ஃப்ரீமாண்ட் அவன்யூ பகுதியில் வசித்து வந்தார்.

நடிகை வசித்து வீட்டின் உரிமையாளர், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29), அவரது உடல்நலம் குறித்து கொடுத்த தகவலின்பேரின் காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.

உள்ளூர் நேரத்தில் நண்பகல் 12 மணியளவில் காவல்துறையினர் சென்றபோது, வனேஸா மார்குஸ் வலிப்பினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். காவல்துறையினர் உடனடியாக மருத்துவ உதவியாளர்களுக்கு மனநல மருத்துவருக்கும் தகவல் அனுப்பினர்.

தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் காவல்துறையினர் அவருடன் பேச முயன்றனர். வனேஸா மார்குஸ், கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து சுட்டுவிடுவதாக எச்சரித்தார். காவல்துறையினர் சுட்டதில் நடிகை பரிதாபமாக பலியானார்.

அதன்பின்னரே, நடிகை கையில் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இதை அடுத்தநாள் வெள்ளிக்கிழமை காவல்துறை உறுதி செய்தது.

புகழ்பெற்ற "ER" என்ற தொலைக்காட்சி தொடரின் 27 பாகங்களில் வென்டி கோல்ட்மேன் என்ற செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வனேஸா மார்குஸ், அந்த தொடரில்தான் தொடர்ந்து நடிக்க முடியாத நிலைக்கு உடன் நடித்த ஜார்ஜ் குளூனியை காரணம் கூறினார் என்பதும், தீவிர மனநல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a reply