அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொது சபையின் 73-வது கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உடைய இந்தியா சுதந்திரமான சமூகத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். வறுமையின் பிடியில் இருந்து லட்சக்கணக்கானோரை வெற்றிகரமாக இந்தியா மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 2 கோடி பேர் நடுத்தர வர்க்கத்துக்கு உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்தால் இந்தியா மீதும் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், எதிர்காலத்தில் நம் குழந்தைகளுக்கு எந்த விதமான உலகத்தை கற்றுக்கொடுப்பது, எந்த சமூகத்தை நேசிக்க கூறுவது ஆகியவை கேள்விக்குறியாக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த நிர்வாகத்தைக் காட்டிலும் தமது தலைமையிலான நிர்வாகம் அதிகம் சாதித்துள்ளதாக அவர் கூறினார். அவர் கூறியதும் பார்வையாளர்கள் உள்பட அங்கிருந்த நிர்வாகிகள் பலரும் பலமாக சிரித்து விட்டனர். இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான டிரம்ப் சிரித்தபடி இப்படிப்பட்ட எதிர்வினையை தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். இதை கேட்டு சபையில் இருந்த அனைவரும் இன்னும் பலமாக சிரித்ததால் அவர் தர்மசங்கடமான நிலைமைக்கு ஆளானார்.