நபி மீதான அவதூறு வழக்கு : கிறிஸ்தவ பெண் விடுவிப்பு

The libel case of the Prophet: Christian woman liberation

by SAM ASIR, Oct 31, 2018, 22:09 PM IST

பாகிஸ்தானில் அவதூறு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண்ணை உச்சநீதிமன்றம் செவ்வாயன்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் இஸ்லாம் சமயம் மற்றும் இறைத்தூதர் முகமது நபி பற்றிய தெய்வ தூஷணம் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தால், அது நிரூபணமாகாவிட்டாலும்கூட பெரிய வன்முறையை தூண்டி விடும். குற்றஞ்சாட்டப்பட்டவர் கொலையாகுமளவுக்கு பெரிய கலவரம் நடக்கும் வாய்ப்பு உருவாகும்.
2009ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி, மாஃபியா பீபி, ஆஸ்மா பீபி, ஆஸியா பீபி ஆகிய பெண்கள் ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது ஆஸியா பீபி குடிப்பதற்கு நீர் மொண்டு வந்துள்ளார். கிறிஸ்தவ பெண்ணான அவர் கொண்டு வந்த நீரை குடிப்பதற்கு மற்ற இருவரும் மறுத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில், ஆஸியா பீபி, இறைத்தூதர் நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இரு பெண்கள் கொடுத்த சாட்சியின் அடிப்படையில் மதகுருவான குவாரி முகமது சலாம், காவல்துறையில் புகார் செய்துள்ளார். மூன்று காவல் அதிகாரிகள் அந்த புகாரை விசாரித்துள்ளனர். ஊர் கூட்டம் ஒன்றில், ஆஸியா பீபி தான் அவதூறு செய்ததாக ஒத்துக்கொண்டு மன்னிப்பு கோரினார் என்பதற்கு உள்ளூரை சேர்ந்த முகமது அஃப்சல் என்பவர் சாட்சி கூறியுள்ளார்.
வாக்குவாதம் நடந்தது உண்மை என்றும், தான் இறைத்தூதர் மேலும் புனித குரான் மேலும் பெரிய மரியாதை கொண்டிருப்பதாகவும், ஒருபோதும் அவதூறாக பேசவில்லை என்பதும் ஆஸியா பீபியின் தரப்பு.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் 2010 நவம்பர் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. லாகூர் உயர்நீதி மன்றம் 2014 அக்டோபர் மாதம் மரண தண்டனையை உறுதி செய்தது. இது குறித்து ஆஸியா பீபி செய்த மேல்முறையீட்டு மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் 2015 ஜூலை மாதம் அனுமதித்தது. பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாகிப் நிஸார் தலைமையில் மூன்று நீதிபதிகள் குழு இந்த வழக்கை விசாரித்தது. 2016 அக்டோபர் 13ம் தேதி முதல் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் வாதங்களை கேட்டது. அக்டோபர் 8ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம், அக்டோபர் 31ம் தேதி, ஆஸியா பீபியை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
"ஏழைகள், சிறுபான்மையினர் போன்ற சமுதாயத்தில் எளிமையானவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்று இந்தத் தீர்ப்பின் மூலம் தெரிய வந்துள்ளது," என்று ஆஸியா பீபியின் வழக்குரைஞர் சாய்ஃப் உல் முலூக் கூறியுள்ளார்.
முன்னதாக ஆஸியா பீபிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தாஸீரை அவரது மெய்க்காப்பாளர் மும்தாஸ் குவாரி 2011ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் பட்டப்பகலில் படுகொலை செய்தார். கொலையாளி மும்தாஸ் குவாரிக்கு 2016ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டாலும் சமய அடிப்படைவாதிகள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
தற்போது ஆஸியா பீபியை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், "மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவர் விடுதலை செய்யப்படுகிறார். விசாரணை மற்றும் உயர்நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் மாற்றப்படுகின்றன. விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது," என்று அறிவித்துள்ள நிலையில் கொல்லப்பட்ட பஞ்சாப் ஆளுநர் தாஸீரின் மகன் சாஹ்பாஸ், "பாகிஸ்தான் வாழ்க" என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
விடுதலையான ஆஸியா பீபிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

You'r reading நபி மீதான அவதூறு வழக்கு : கிறிஸ்தவ பெண் விடுவிப்பு Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை