ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்

by Ari, May 5, 2021, 11:51 AM IST

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண் பிரேமா. கடந்த மாதம் 28-ம் தேதி காலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வராததால், அவரை தேடி அவரது தாய் தோட்டத்திற்கு சென்றார். அப்போது, தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரேமா போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்துபோன அவரது தாயார், மகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் சிகிச்சை பலனின்றி பிரேமா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பிரேமாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், எடைக்கல் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர். அதில் சின்னசேலம் அருகே உள்ள அம்மையகரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலா என்பவரை பிரேமா காதலித்து வந்தது தெரியவந்தது. ஆனால், அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

பாலாவின் செல்போனை போலீசார் ஆராய்ந்ததில், பிரேமாவின் தந்தை நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வரும் 48 வயதான கலியமூர்த்தி என்பவரின் செல்போனில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்தது தெரியவந்தது. பிரேமாவிடம் போன் இல்லாததால், கலியமூர்த்தியின் செல்போனை வாங்கி பாலாவுக்கு போன் செய்துள்ளார் பிரேமா.

கலியமூர்த்தியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், பிரேமா மீது ஆசைபட்ட கலியமூர்த்தி கடந்த 28-ம் தேதி தனியாக வந்த பிரேமாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதில் பிரேமா மறுத்து சத்தம்போடவே அவரை அருகில் இருந்த கட்டையால் தலையில் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து கலியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

You'r reading ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல் Originally posted on The Subeditor Tamil

More Villuppuram News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை