வனத்துறையினர், பொதுமக்களின் விடாத விரட்டலால், குடிக்க தண்ணியின்றி, உணவின்றி ஓடிக்கொண்டே....இருந்த சின்னத்தம்பி யானை சோர்ந்து மழுங்கி விழுந்தான்.
கோவை வனப்பகுதியில் இருந்து சின்னத்தம்பி, விநாயகன் என்று பின்னர் பெயரிடப்பட்ட இரு யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சி, சின்னத் தடாகம் பகுதியில் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் உலா வந்தன. பொது மக்கள் அச்சமடைந்ததால் வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் விநாயகனையும், சின்னத்தம்பி யானைகளை மடக்கினர்.
இரு யானைகளையும் வனப்பகுதிக்கு கொண்டு செல்ல லாரிகளில் ஏற்ற முயன்றனர். சின்னத்தம்பி யானை முரண்டு பிடித்ததால் ஜேசிபி உதவி கொண்டு முரட்டுத்தனமாக லாரியில் ஏற்றினர். அப்போது சின்னத்தம்பியின் தந்தம் உடைந்து, உடம்பில் பல இடங்களில் காயம்பட்டு அவஸ்தைப்பட்டதைக் கண்ட பலரும் கண்ணீர் சிந்தினர். வன ஆர்வலர்கள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
லாரியில் ஏற்றிய விநாயகனை முதுமலை வனத்திலும், சின்னத்தம்பியை டாப்சிலிப் வனப்பகுதியிலும் கொண்டு விட்டனர்.
ஆனால் உறவுகளைப் பிரிந்த சோகத்தில் நேற்று முன்தினம் மீண்டும் ஊருக்குள் புகுந்தான் சின்னத்தம்பி யானை. பொள்ளாச்சி, மடத்துக்குளம் பகுதியில் வனத்துறையினரின் விரட்டல் முயற்சி இரவு, பகலாக நீடித்தது.
வனத்துறையினருடன் பொதுமக்களும் சேர்ந்து விரட்ட மூன்று நாட்களாக 50 கி.மீ. தூரத்துக்கும் மேல் ஒய்வின்றி.... உணவின்றி... தண்ணீரின்றி.... ஓடிக் கொண்டேயிருந்த சின்னத்தம்பி கடைசியில் சோர்ந்து விட்டான். இன்று பிற்பகல் மடத்துக்குளம் பகுதியில் மயங்கி விழுந்தான். மருத்துவர்கள் சிகிச்சைக்குப் பின் மீண்டும் சின்னத் தம்பியை காட்டுக்குள் விடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வாயில்லா ஜீவன்களின் வசிப்பிடத்தை, வாழ்விடத்தை மனிதன் அழிக்க..அழித்துக் கொண்டும் இருக்க... வேறு வழியின்றி ஊருக்குள் புகும் சின்னத்தம்பி போன்ற யானைகளின் சோகக்கதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என வன ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.