குஜராத் மாநில பாடத்தில் சீதையை கடத்திச் சென்றது ராமர் என குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் 12ம் வகுப்பு சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் கவிஞர் காளிதாஸின் 'ரகுவம்சம்' என்ற கவிதை இடம்பெற்றுள்ளது.
இந்த கவிதையில், ராமாயணத்தில் சீதையை கடத்திச் சென்றது ராமர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருத இலக்கண புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த தவறான வாசகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாநில பள்ளி பாடநூல் கழக நிர்வாக தலைவர் நிதின் பதேனியிடம் கேட்டபோது, “மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாகும். ராவணன் என குறிப்பிடுவதற்கு பதிலாக ராமன் எனக் கூறப்பட்டுள்ளது” எனவும் “இது குஜராத் பாடநூல் கழகத்தின் தவறு இல்லை” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
‘விடிய விடிய கதை கேட்டு விட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பதா' என்ற பழமொழியை, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த தவறான வாசகம் நினைவுபடுத்துகிறது.