ஜி7 மாநாட்டில் இதுவரையில் கனடாவுடன் வாக்குவாத மோதலில் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது இந்தியாவையும் தன் கருத்துகளால் தாக்கத் தொடங்கி உள்ளார்.
ஜி7 மாநாட்டில் கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை பல விஷயங்களுக்கு நேரடியாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், தற்போது தன் விமர்சனப் பார்வையை இந்தியா நோக்கி திருப்பியுள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற ஜி7 மாநாடு கனடாவில் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் நேற்று கூட்டறிக்கை விடப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு பெரும் அரசியல் களேபரமே நடந்து முடிந்தது.
குறிப்பாக, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும் இடையில் நடந்த கருத்துப் போர் உலக அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி போடும் நாடுகள் அனைத்துக்கும் எதிராகவும் பேசியுள்ளார் ட்ரம்ப். 'ஜி7 நாடுகள் மட்டும் அமெரிக்காவுக்கு அதிகமான வரி விதிப்பைப் போடுவதில்லை. இந்தியாவும் அப்படித் தான் செய்கிறது. அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் 100 சதவிகிதம் வரி விதிப்பு போடப்படுகிறது” எனக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.