கர்நாடகா மாநிலத்தில் சமூக வலைதளம் மூலம் ஒஷாமா பின்லேடனுக்கு ஆதரவு திரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைதளங்களில் தீவிரவாதிகள் ஊடுருவலை, கர்நாடகா மாநில சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். போலீஸ் வலையில் சிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கர்நாடகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், சமூக வலைதளம் மூலம் ஒஷாமா பின்லேடனுக்கு ஆதரவாக ஆட்கள் சேர்த்து வந்துள்ளார். அதாவது 'ஒஷாமா பின்லேடன் இஸ் மை காட்' என்று பெயரிட்டு, அதற்கு ஆதரவாளர்களை திரட்டி வந்துள்ளார்.
இதனை நோட்டமிட்டு சைபர் கிரைம் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில், மாநில காவல்துறை தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட இளைஞரை தேடி வந்தது. மேலும் அவரது பேஸ்புக் மற்றும் இதர சமூக வளைத்தளங்களின் ஐ.பி முகவரியை சேகரித்த காவல்துறை, அந்த இளைஞரை கைது செய்தது.
விசாரணையில் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திபுராவை சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 100 சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான இளைஞர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பின்புலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.