இந்தோனேஷியாவில், பழிவாங்கும் நோக்கத்தில் பண்ணையில் இருந்த சுமார் 300 முதலைகளை வெட்டி சாய்த்த கிராம மக்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேஷியா, பப்புவா மாநிலம், சோராங் என்ற நகரில் மிகப் பெரிய முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணை குடியிருப்பு பகுதிக்கு அருகே இருப்பதால், பொது மக்கள் அச்சமடைந்து வந்தனர். இதனால், பண்ணையை வேறு இடத்திற்கு மாற்றும்படி அதன் உரிமையாளரிடம் கோரிக்கைவிடுத்தனர். இருப்பினும், இந்த பண்ணை தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சுகிட்டோ (48) என்பவர் முதலைப் பண்ணைக்கு அருகே புற்களை அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அங்கு வந்த முதலை ஒன்று சுகிட்டோவின் காலைக் கடித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த சுகிட்டோ அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அப்போது, மேலும் சில முதலைகள் வந்து அவரை கடித்துகொன்றது.
இதனால், அதிர்ச்சியடைந்த பொது மக்கள் சுகிட்டோ இறுதிச் சடங்கை முடித்த கையோடு, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முதலை பண்ணைக்கு விரைந்தனர். ஆத்திரத்தில், கண்ணில்பட்ட முதலைகள் அனைத்தையும் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதனால், பண்ணையில் இருந்த சுமார் 300 முதலைகளை பொது மக்கள் கொன்று பழித்தீர்த்துக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பண்ணை நிர்வாகத்தினர் போலீசிடம் புகார் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட போலீசார் பின்னர் கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த பழிதீர்த்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.