ரஜினியின் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர், மதுரையில் மாபெரும் கூட்டத்தை கூட்டி தனது கட்சியின் பெயரை அறிவிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.
அரசியலுக்கு வருவேன் என்று பல காலமாக கூறி வந்த நடிகர் ரஜினி, கடந்த 2017ம் ஆண்டு, சிஸ்டம் சரியில்லை என்றும் போர் வரும் போது போட்டியிட்டு வெல்வேன் என்றும் கூறி தனது ஆன்மிக அரசியல் அறிவிப்பை அறிவித்தார்.
ஆனால், அதற்கு பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினி போட்டியிடவில்லை. ஏன் அப்போது கூட தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்கவில்லை.
இதுகுறித்து பல மீம்களும், டிரோல்களும், விமர்சனங்களும் வெளிப்படையாகவே தினமும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட ரஜினி முழு பலத்தை திரட்டி வருவதாகவும், 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடத்தி தனது கட்சியின் பெயரை ரஜினி அறிவிக்க உள்ளார் என்ற செய்தி கிடைத்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா இணைந்து நடித்து வரும் தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், அந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ரஜினி தீவிர அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.