நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு சூழல் நிலவுவதால், பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடங்கிவருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஏப்ரலில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தேர்தல் கெடுபிடியால் பண பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் ஒரு பெரிய பட்ஜெட் படம் தயாராகும் போது கோடிகளில் செலவாகும். அதற்கான ஆவணங்களை கையாளுவதிலும் சிக்கல் எற்படும். இந்தப் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினி கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பை மே மாதம் தொடங்க படக்குழு முடிவெடுத்திருக்கிறது. இப்படம் மட்டுமல்லாமல், பல பெரிய பட்ஜெட் படங்களும் படப்பிடிப்பின் வேகத்தை குறைத்துள்ளது என்றும் சொல்கிறார்கள்.
2.0 படத்தைத் தொடர்ந்து ரஜினியின் இந்தப் படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குநரின் தரப்போ, தயாரிப்பு தரப்பிலோ இன்னும் அதை உறுதி செய்யவில்லை. ஆனால், படத்துக்கு இசை அனிருத் மற்றும் ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் என்பது மட்டும் உறுதியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.