தான் ஹீரோவாக நடிக்க தயார் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட இளையராஜா, “ஜனனி ஜனனி” பாடலோடு பேசத் தொடங்கினார். அப்போது, ``நல்ல விஷயங்களை வெளிக் கொண்டு வரும் இசைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அதனால் அனைத்து கல்வி நிலையங்களிலும் இசையை பாடமாக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அந்த அதிர்வை என் மூளையால் தொட முடிந்தது. இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்படும் இசைக்கு தான் உணர்வுகள் அதிகம். கம்ப்யூட்டர் இசையில் அத்தகைய ஆத்மார்த்த உணர்வைப் பெற முடியாது.
எனக்கு எப்போதுமே உணர்வுப்பூர்வமான இசை தான் பிடிக்கும். இசை அமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியும், பாடல்கள் எழுதியும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளேன். என்னை பொறுத்தவரை மாணவர்களே கனவு காணக்கூடாது முயற்சி செய்ய வேண்டும். 1978-ல் 56 வாரங்களில் 58 படங்களுக்கு இசையமைத்தேன்” என்றவரிடம், உங்கள் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுமா? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இளையராஜா, ``என்னுடைய வாழ்க்கை வரலாறை சுயசரிதையாக எழுதி வருகிறேன். அது விரைவில் வெளியாகும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன். மூன்றே நாட்களில் படமாக்கலாம்’ என்றார்.