லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படம் இந்த வருட தொடக்கத்தில் பொங்கல் தினத்துக்கு வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினி ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். அரசியல்வாதிகள், தாதாக்கள் என கெட்டவர்கள் சூழ் உலகில் இருக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறது. ஒரு மாதம் தொடர்ச்சியாக படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்கவிருக்கிறது. அப்படியென்றால், ஏப்ரல் 18ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப்போட ரஜினி சென்னை வருவாரா என்று நெருங்கிய வட்டாரத்திடம் விசாரித்தேன். ஏனெனில் ரஜினியும் அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவருகிறார். விரைவில் கட்சியை பலப்படுத்தி, தேர்தலில் போட்டியிடவும் இருக்கிறார். அதன்படி விசாரித்ததில்...
பத்தாம் தேதி தொடங்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் ரஜினி, 17ஆம் தேதி புறப்பட்டு சென்னை வருகிறாராம். ஏப்ரல் 18ல் அதிகாலையிலேயே ஒட்டுப் போட்டுவிட்டு, அன்று மதியமே மும்பையில் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம் ரஜினிகாந்த். அவருடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் ஓட்டுப்போட வந்து செல்லவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.