ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது.
பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்பொழுது நடித்துவருகிறார் ரஜினி. தர்பார் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதி மும்பையில் தொடங்கி தற்பொழுது நடந்துவருகிறது. நாளை தேர்தல் என்பதால், ஒட்டுமொத்த தர்பார் குழுவும் தற்போது சென்னை வந்திருக்கிறது.
முதல்கட்டமாக, நயன்தாரா படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார். மேலும், ரஜினி இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தவிர, படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் என்கிற செய்தி மட்டுமே உறுதியான தகவல்கள்.
இந்நிலையில், தர்பார் படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் உறுதி செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாலிவுட் நடிகர்கள் ஸ்மிதா பாடில் மற்றும் ராஜ் பப்பாரின் மகன் ப்ரதீக் பப்பார். கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின், பாலிவுட் ரீமேக்கான ’ஏக் தீவானா தா’ படத்தில் இவர் தான் நாயகன். இவர் தான் ரஜினிக்கு எதிராக கெத்து காட்ட இருக்கிறார். தர்பார் படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.