தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த 2015ம் ஆண்டு கடைசியாக தேர்தல் நடைபெற்றது. அப்போது சங்கப் பொறுப்பில் இருந்த சரத்குமார், ராதாரவிக்கு எதிராக ஒரு புதிய அணி உருவானது. நாசர் தலைமையிலான அந்த அணியில் நடிகர்கள் விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றனர். அவர்கள், ராதாரவிக்கு எதிராக கடுமையாக களம் இறங்கினர். அதனால், அந்த தேர்தல் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலை விட பதற்றமாக நடைபெற்றது.
அந்த தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது. நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த 2018ம் ஆண்டு முடிவுற்றது. ஆனால், தி.நகரில் உள்ள நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் பணி முடிவடையாததால், 6 மாதங்களுக்கு தேர்தலை தள்ளி வைத்தனர். அந்த கால அவகாசமும் முடிந்த நிலையில், கட்டிடம் மட்டும் முடிந்தபாடில்லை.
இதைத் தொடர்ந்து, கடந்த 14ம் தேதியன்று சங்கத்தின் செயற்குழு கூடி, தேர்தல் பற்றி விவாதித்தது. அப்போது தேர்தலை நடத்த முன்னாள் நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியான முன்னாள நீதிபதி பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.