பிரபாஸின் சாஹோ திரைப்படம் 4 நாட்களில் 330 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சாஹோ. இந்த படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி வெளியானது.
இந்த படத்தில், பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார். மேலும், வில்லன்களாக ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ் மற்றும் நம்மவூர் அருண் விஜய்யும் அசத்தியிருந்தனர்.
300 கோடி எனும் மெகா பட்ஜெட்டில் இயக்குநர் சுஜித் இந்த படத்தை இயக்கினார். இவ்வளவு பெரிய தொகையை யுவி கிரியேஷன்ஸ் முதலீடு செய்திருந்தது.
படம் ரிலீசானதில் இருந்து தற்போது வரை, சூர மொக்கை என விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 300 கோடி ரூபாயை வீணடித்து விட்டார் சுஜித் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், தற்போது, உலகளவில் படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றுள்ளதாகவும் 330 கோடி அதாவது பட்ஜெட்டை விட அதிகமாக நான்கே நாட்களில் வசூலித்து விட்டதாகவும், படக்குழு அதிகாரப்பூர்வமாக விளம்பரப்படுத்தியுள்ளது.
சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் கணக்கு விபரங்களை தெரிவித்து வரும் தரண் ஆதர்ஷ் இந்தி வெர்ஷன் மட்டும் 100 கோடியை தாண்டியதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 330 கோடி வசூலை பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தாலும், கமெண்டில் ரசிகர்கள் 330 கோடியாமப்பே என வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமெடியை போல கலாய்த்து வருகின்றனர்.