திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யும் போது, ஒரு டிக்கெட்டுக்கான இணையதள சேவை கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.
திரைப்படங்கள் பார்ப்பவர்கள், தற்போது பெரும்பாலும், புக் மை ஷோ, டிக்கெட் நியூ போன்ற ஆன்லைன் தளங்களில் டிக்கெட்டுகளை புக் செய்து படம் பார்க்கின்றனர். அவ்வாறு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் மக்களுக்கு ஏற்படும் ஒரே பிரச்சனை என்னவென்றால், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தனித்தனியாக இண்டெர்நெட் ஹேண்ட்லிங் ஃபீ எனப்படும் இணையதள சேவைக் கட்டணம் தான். ஒரு டிக்கெட்டுக்கு 35 முதல் 40 ரூபாய்க்கும் மேல் ஆன்லைன் சேவை வரி விதிக்கப்படுவதால், எத்தனை டிக்கெட்டுகள் எடுத்தாலும், அத்தனை முறையும் ஆன்லைன் சேவை வரி கட்ட வேண்டிய டென்சன் இருந்து வந்தது.
இதனை தவிர்க்க சிலர், நேரடியாக தியேட்டருக்கு சென்றே டிக்கெட்டுகளை வாங்கவும் செய்து வந்தனர். ஆனால், சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட ஒரு அறிக்கையில், இனிமேல் சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் என்று அறிவித்தார்.
அவரது அறிவிப்பை தொடர்ந்து, ஆன்லைன் சேவை வரி கட்டணத்தில் வசூலை வாரி குவிக்கலாம் என்ற நோக்கத்தோடே சாமானியர்களின் வயிற்றில் அடிக்கலாம் என இவ்வாறு செய்கின்றனர் என பலரும் கண்டனக் குரல்கள் எழுப்பினர்.
இந்நிலையில், தற்போது, ஆன்லைனில் எத்தனை டிக்கெட்டுகள் ஒருவர் புக் செய்தாலும், ஒரே ஒரு டிக்கெட்டுக்கான இணையதள சேவை வரியை செலுத்தினால் போதும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு நல்லது என்றாலும், ரயில்வே, பஸ் டிக்கெட்டுகளை போல, அதிக எண்ணிக்கையில் சிலர் வாங்கிக் கொண்டு பிளாக்கில் விற்காமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த திட்டத்தை அணுகலாம்.