நாட்டுக்கு கமாண்டோ முக்கியமா விவசாயி முக்கியமா? காப்பான் விமர்சனம்!

by Mari S, Sep 20, 2019, 15:00 PM IST

பிரதமரின் பாடிகாட் பிரிவில் இருக்கும் சூர்யா, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விவசாயியாக எப்படி மாறுகிறார் என்பதே காப்பானின் கதை.

சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே என வரிசையாக சூர்யாவுக்கு மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில், இன்று வெளியாகி இருக்கும் காப்பான் படம் எந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கும் கதையாக இருக்கிறது என்பதை பார்ப்போமா?

பிரதமராக வரும் மோகன்லாலின் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நியமிக்கப்படுகிறார். மோகன் லாலை ஒரு கும்பல் சூழ்ச்சி செய்து அவரை கொலை செய்து விடுகின்றனர்.

அதனை தடுக்க முடியாமல் சூர்யா திணறுகிறார். பின்னர், உல்லாசமாக திரிந்து கொண்டிருந்த ஆர்யாவை பிரதமராக பதவி பிரமாணம் செய்கின்றனர். இந்தியர்களின் போதா காலம் அப்படித்தான் இருக்கிறது.

மோகன் லாலை தொடர்ந்து ஆர்யாவையும் அதே க்ரூப் கொலை செய்ய நடத்தும் சூழ்ச்சிகளில் இருந்து சூர்யா எப்படி ஆர்யாவை காப்பாற்றினாரா இல்லையா? என்பதையும் கமோண்டோக்களை விடவும் நாட்டிற்கு விவசாயிகளின் தேவை எவ்வளவு முக்கியம் என்பதையும் கார்ப்பிரேட்கள் இந்தியாவில் நடத்தும் சதியையும் வெட்ட வெளிச்சமாக, கொஞ்சம் சினிமா தனங்களை சேர்த்துக் கொண்டு வழக்கமான தனது பாணியில் பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் கே.வி. ஆனந்த்.

அயன், மாற்றான், கோ, கவண் என ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு துறையில் நடைபெறும் அரசியலையும் அதன் டீட்டெய்லிங்கையும் பிடிக்கும் கே.வி. ஆனந்த், இந்த படத்தில் விவசாயம் மற்றும் கார்ப்பிரேட் யுத்தத்தை கையில் எடுத்து கச்சிதமாக சிக்ஸர் அடிக்க திட்டமிட்டு பவுண்டரி அடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

சூர்யாவுக்கு பெயருக்காக ஒரு நாயகி இருக்க வேண்டும் என்று சாயிஷாவை வைத்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்துமே சுமார் ரகம் தான் என்றாலும், திரைக்கதை சில இடங்களில் சறுக்கினாலும் மெயின் கதை வலுவாக இருப்பதால், படம் விறுவிறுப்பாக செல்கிறது.

கார்ப்பிரேட் அரசியல் செய்யும் ரியல் வில்லனாக வரும் பொம்மன் இரானி, மிரட்டல் ஆக்டிங். அவருக்கு நிழல்கள் ரவியின் வாய்ஸ் மிகவும் கச்சிதமாக பொருந்துகிறது.

காவிரி டெல்டா பிரச்னை, விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு போன்ற விஷயங்களை திரைக்கதையில் கையாண்டுள்ள விதமும் அதற்கான வசனங்களும் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.

பாகிஸ்தான் தூதரிடம் மோகன் லால் பேசும் வசனமும், பாகிஸ்தான் மக்களுக்காக பரிந்து பேசும் காட்சிகளும் லால் ஏட்டனின் நடிப்பின் உச்சகட்டம்.

மொத்தத்தில் காப்பான் ஒரு நல்ல கமர்ஷியல் விவசாயி!

சினி ரேட்டிங்: 3/5.


Leave a reply