யோகிபாபுவை வைத்து படம் இயக்கும் ஜெயம் ரவி..

by Chandru, Oct 10, 2019, 13:42 PM IST

விபத்தில் சிக்கி கோமாவிற்கு செல்லும் ஜெயம்ரவி சிகிச்சை பிறகு குணம் அடைந்து வரும் கதாபாத்திரத்தில் நடித்த படம் கோமாளி. பரபரப்பில்லாமல் வெளியான இப்படம் சத்தமில்லாமல் ஹிட்டாகி 50 நாளை கடந்து படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

காஜல்அகர்வால், யோகிபாபு நடிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இதன் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்று ஜெயம் ரவி பேசினார். அவர் கூறியதாவது:

நல்ல படம் கொடுத்தால் கொண்டாடுவீர்கள், பாராட்டுவீர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இந்த வெற்றி நிறைவை தந்திருக்கிறது. தனி ஒருவனில் வராத டயலாக் ஒன்று இருந்தது. நேர்மையாய் இருப்பது என்பது நமது கடமை அது சாதனை ஆகாது. நாம் நல்லவனாக இருக்க வேண்டியது கடமை. நான் மகிழ்ச்சியாக வேலை செய்வதால் தான் வெற்றி தேடி வருகிறது. செய்யும் வேலையை சந்தோஷத்தோடு செய்தால் போதும். படத்தில் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள்.

ஹிப்ஹாப் ஆதி என் கேரியரில் இரண்டு பெரிய வெற்றி தந்திருக்கிறார். என் வெற்றியை கொண்டாடியவர். நான் நிறைய புதிதாக முயற்சிக்கிறேன் அதை ஆதரவு தந்து ரசிப்பது ஆடியன்ஸ் தான். அவர்களால் தான் வித்தியாசமான படம் செய்கிறேன். இந்தப்படத்தில் யோகிபாபு தான் வேண்டுமென்று நான் தான் சொன்னேன்.

அவர் மிகச்சிறந்த நண்பராகிவிட்டார். அவரை வைத்து நான் படம் இயக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருக்கிறேன் பார்ப்போம். சக்தி உண்மையாக இருக்கும் ஒரு நபர். ஐசரி கணேஷ் எனது அண்ணன் போன்றவர் நமக்கு தெரியாமல் நிறைய நல்ல விசயங்கள் செய்து கொண்டே இருப்பவர். இந்த விழா உங்களுக்கு நன்றி சொல்லும் விழா இந்தப்படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்றார்.


Leave a reply