மோகன்ராஜா இயக்கத்தில் பிரசாந்த்? ரீமேக் படத்தை இயக்குவாரா..

by Chandru, Jan 21, 2020, 20:14 PM IST

தனி ஒருவன் இயக்குனர் மோகன்ராஜா அடுத்து தனி ஒருவன் 2ம் பாகம் இயக்கு வதற்காக தயாராக இருக்கிறார். அதற்கான பணிகளை தொடங்கவிருந்த நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ரவிக்கு வாய்ப்பு வந்தது. இதுபற்றி மோகன்ராஜாவிடம் சொன்னார் ரவி. உடனே அவர், மணிரத்னம் பட வாய்ப்பை மிஸ் பண்ணாதே அதை முடித்துவிட்டு வா பின்னர் தனி ஒருவன் 2ம் பாகம் செய்யலாம் என கூறினார். இதையடுத்து அடுத்த படம் இயக்குவதுபற்றி முடிவு செய்யாமலிருக்கிறார் மோகன்ராஜா.

இந்நிலையில் பிரசாந்த் நடிக்கும் படத்தை மோகன்ராஜா இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இந்தியில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான படம் அந்தாதுன். இப்படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் தியாராஜன் பெற்றிருக்கிறார். அதில் பிரசாந்த்தை நடிக்க வைத்து தயாரிக்கவும் எண்ணி உள்ளார். மோகன்ராஜா இப்படத்தை இயக்கினால் பொருத்தமாக இருக்கும் என்று தியாகராஜன் எண்ணுகிறார். இதுகுறித்து அவர் மோகன்ராஜாவிடம் பேசி வருகிறாராம். இதில் உடன்பாடு ஏற்பட்டால் மோகன் ராஜா இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் படமாக இது உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என 4 படங்களை தெலுங்கிலிருந்து தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் மோகன்ராஜா. இனிமேல் ரீமேக் படம் இயக்க மாட்டேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரசாந்த்தை வைத்து ரீமேக் படத்தை இயக்குவரா என்று சிலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இயக்குனர் மோகன்ராஜா தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply