சிவாஜி, ராதா, வடிவுக்கரசி நடிப்பில் பாரதி ராஜா இயக்கிய படம் முதல்மரியாதை. பாரதி ராஜா இயக்கிய படங்களில் இதுவொரு முத்திரை பதித்த படமாக அமைந்தது. அந்த டைட்டில் அப்போது சிவாஜிக்காக வைக்கப்பட்டதாக பாரதிராஜா அப்போது குறிப்பிட்டி ருந்தார். தற்போது, மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்குகிறார் பாரதிராஜா. இது முதல் மரியாதை படத்தின் 2ம் பாகம் அல்ல. ஆனால் அந்த படம்போலேவே இப்படத்திலும் ஒரு முதியவருக்கும். இளம்பெண்ணுக்குமான நட்பை, காதலை பாசத்தை சொல்லும் படமாக உருவாகிறது.
இதுகுறித்து பாரதிராஜா கூறும்போது,' வாழ்க்கையை முடித்துக்கொண்டு தற்கொலை செய்ய எண்ணும் ஒரு இளம் பெண்ணை காப்பாற்றி என்னுடன் 10 நாள் இந்த உலகத்தை சுற்றிப்பார். அதில் உள்ள அழகை ரசித்தால் உனக்கு இந்த எண்ணம் வராது அதற்குமேலும் நீ வாழ முடியாது என்று நினைத்தால் அதன்பிறகு உன் இஷ்டப்படி மாய்த்துக்கொள் என்று சவால் விட்டு அப்பெண்ணை தற்கொலையிலிருந்து காக்கும் ஒரு கிராமத்து விவசாயி மற்றும் எழுத்தாள ருக்கும். இளம் பெண்ணுக்கும் இடையிலான பாசமிக்க கதையாக இது உருவாகியிருக்கிறது. ஹீரோயினாக ராசி நட்சத்திரா நடிக்க விவசாயியாகவும் எழுத்தாளராகவும் நான் (பாரதிராஜா) நடிக்கிறேன். முதலில் இப்படத்துக்கு ஓம் என பெயரிடப்பட்டது. ஓம் என்றால் ஓல்டு மேன் என்று அர்த்தம். அது இளைஞர்களுக்கு பிடிக்காது என்பதால் மீண்டும் ஒரு மரியாதை என படத்தின் டைட்டில் மாற்றப்பட்டது.
இப்படத்தின் பாடல்களை வைரமுத்து, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் எழுதி உள்ளனர். அவற்றுக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருக்கிறார். பின்னணி இசையை சபேஷ்-முரளி அமைக்கின்றனர். சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு செய்கிறார். மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.
இவ்வாறு பாரதிராஜா கூறினார்.