சந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் ஜனவரி 31 வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்தது. ஆனால் இரண்டு பட தயாரிப்பாளர்கள் படத்தை ஒரே நாளில் ரிலீஸ் செய்வதில் பிடிவாதமாக இருந்தனர்.
தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இதையடுத்து இரண்டு தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் சமரச பேச்சு நடந்தது.
இச்சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, பெப்சி சிவா, கே. ராஜன் “சர்வர் சுந்தரம்” படத்தயாரிப்பாளர் செல்வகுமார் மற்றும் “டகால்டி” படத்தயாரிப்பாளர் சௌத்ரி கலந்து கொண்டனர். இதில் இரதரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டது. இதையடுத்து
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவுரையை ஏற்று டகால்டி படம் இம்மாதம் 31ந்தேதி வருகிறது. சர்வர் சுந்தரம் பிப்ரவரி 14 ல் வெளியிடுவதாக ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து பாரதிராஜா கூறும்போது,' இக்காலத்தில் படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது அதை விட கஷ்டமானது. இந்தப் பிரச்சனையில் எங்கள் தீர்ப்பை விட அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் மனது பெருந்தன்மையானது. சர்வர் சுந்தரம் படத்தின் மீது எனக்கு கொஞ்சம் அன்பு அதிகம். அந்த தலைப்பின் மீதிலிருந்தே எனக்கு பல மலரும் நினைவுகள் உண்டு. நாகேஷ் நடித்த அந்தப்படம் முதலில் வந்தபோது நான் உதவி இயக்குநர் கூட இல்லை. தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார் விட்டுக்கொடுத்துள்ளார். தங்கமான மனிதர் அவர். இருவரும் ஒரே நேரத்தில் வந்தால் அவர்களுக்கும் நஷ்டம் சினிமாவுக்கும் நஷ்டம். இருவரும் சுமூகமாக ஒத்துக்கொண்டு இப்போது படத்தை வேறு வேறு தேதிகளில் ரிலீஸ் செய்கிறார்கள். இருவருக்கும் எனது நன்றிகள். இரு படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்' என்றார்.