நடிகை பூஜா குமாரை மறந்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் கமல் தனது 60வது ஆண்டு திரையுலக பிரவேச விழாவை கொண்டாடியபோது அவருடனே ஒட்டிக்கொண்டு குடும்ப விழாவிலும் கலந்துகொண்டவர். மேலும் விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர். உலக நாயகனுடன் ஜோடியாக நடித்தும் பெரிதாக படங்கள் வரவில்லையே என்று புழுங்கிக்கொண்டிருந்த பூஜா குமாருக்கு, கபடதாரி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் ஹீரோவாக சிபி ராஜ் நடிக்கிறார். பிரதீப் இயக்குகிறார்.
படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென்று அப்படத்திலிருந்து விலகுவதாக பூஜா குமார் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு அர்ஜென்ட்டாக செல்ல வேண்டியிருப்பதால் இப்படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவாகியிருப்பதாக கூறினார். அதை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர். அவருக்கு பதிலாக வேறு நடிகையை தேடினர். சுமன் ரங்கநாதன் தேர்வானார்.
இவர் 90களில் தமிழ் படங்களில் பிரபல ஹீரோக்களுடன் நடித்தவர். விஜயகாந்த் நடித்த மாநகர் காவல், சத்யராஜ் நடித்த மேட்டுப்பட்டி படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பின்னர் கன்னட படங்களில் நடிக்கச் சென்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜீத் நடித்த என்னைஅறிந்தால் படத்தில் ரீஎன்ட்ரி ஆனார். ஆனால் பெரிதாக அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. தற்போது கபடதாரி படம் சுமன் ரங்கநாதனுக்கு முக்கிய படமாக அமைந்திருப்பதால் இதையே தனது ரீஎன்ட்ரி படமாக அவர் கருதுகிறாராம்.
கபடதாரி படத்துக்கு ஜான் மகேந்திரனுடன் இணைந்து திரைக்கதை எழுகிறார் தனஞ்செயன். இதில் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். சைமன் K கிங் இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்துக்காக சுமன் ரங்கநாதன் நடித்த அசத்தலான பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.