திரைப்படங்களில் பாடல்கள் முக்கிய அம்சமாக உள்ளது. பழைய பாடல்கள் சில படங்களில் அப்படியே பயன் படுத்தப் பட்டாலும் சில படங்களில் வேறு இசை அமைப்பாளர்களைக் கொண்டு ரீமிக்ஸ் செய்து படமாக்குகின்றனர்.
எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன் நடித்த 'நியூ' படத்தில் தொட்டால் பூ மலரும் என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ரீமிக்ஸ் செய்தார். அதேபோல் விஜய், ஸ்ரேயா நடித்த அழகிய தமிழ் மகன் படத்திற்காக பொன்மகள் வந்தாள் பாடலை ரஹ்மான் ரீமேக் செய்தார். இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
மணிரத்னம் இயக்கிய பம்பாய்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற அந்த அரபிக் கடலோரம் பாடல் அப்போதே பிரபலமாக வலம் வந்தது. பின்னர் மணிரத்னம் ஓகே கண்மணி என்ற படத்தை இயக்கினார். இதில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்துக்காகப் பம்பாய் படத்தில் இடம்பெற்ற அந்த அரபிக் கடலோரம் பாடலை ரீமிக்ஸ் செய்ய ரஹ்மானிடம் கேட்டுக்கொண்டார் மணிரத்னம்.
இந்நிலையில் பிரபுதேவா இந்தியில் 'ஸ்ட்ரீட் டான்ஸர்' படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக முக்காலா முக்காபாலா பாடலை ரீமேக் செய்வதற்காக உரிமையை ரஹ்மானிடம் கேட்டுப் பெற்றார் பிரபுதேவா.
தனது பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவதை விரும்பாத ரஹ்மான் தன் பாடலை தன்னையே ரீமிக்ஸ் செய்யச் சொல்வதைக் கேட்டு எரிச்சல் அடைந்துள்ளார். இதுகுறித்த தனது அதிருப்தியைச் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் வெளிப்படுத்தினார். மேலும் புதிய பாடல்களுக்கு இசை அமைக்கவே தனக்கு ஆர்வம் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.