ரஜினிகாந்த் 1981ம் ஆண்டு தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்த படம் நெற்றிக்கண். இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. விசு கதை எழுதி இருந்தார்.
39 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை ரீமேக் செய்து தனுஷ் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. அது நடிகரும், எழுத்தாளருமான விசுவின் கவனத்துக்குச் சென்றது. உடனே அவர் தனுஷுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார். அதில் நெற்றிக்கண் படத்தின் கதையை எழுதியது நான்தான். அப்படத்தின் ரீமேக் உரிமையை கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து மட்டும் அனுமதி பெற்று ரீமேக் செய்யக்கூடாது. கதாசிரியர் என்ற முறையில் என் அனுமதியும் பெற வேண்டும். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு பிரச்சினை எழுப்பக்கூடாது என்பதால்தான் இப்போதே நான் தனுஷிடம் இதனை தெரிவிக்கிறேன். என் அனுமதியில்லாமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் சட்ட ரீதியான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி வரும் என அறிக்கையில் விசு குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பான நிலையில் தற்போது பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் சார்பில் புஷ்பா கந்தசாமி பதில் அளித்திருக்கிறார். அதில் விசுவின் கேள்விக்குப் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது.'கவிதாலயா நிறுவனம் ஜாம்பவான் கே.பாலசந்தரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் மூலம் பட உரிமை விற்கும்போது அதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப கவனத்துடன் செயல்படுகிறது. அதுபோன்ற சமயங்களில் எழுத்தாளரின் முக்கியத்துவத்தை உணர்ந்தே செயல்படுகிறோம். நெற்றிக்கண் படம் பற்றி உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது மன வருத்தம் அளித்திருக்கிறது. இப்படத்தின் ரீமேக் உரிமையை இதுவரை யாரும் எங்களைக் கேட்கவில்லை. கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தைத் தரவில்லை என விசு கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. ரீமேக் உரிமை விற்கப்படுமானால் சம்பந்தப்பட்டவர்களின் உரிமையை மனதில் கொண்டே செயல்படுவோம்' எனத் தெரிவித்திருக்கிறார்.