மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எழுதி இயக்கி தயாரித்து நடித்த படம் ஹேராம். மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொல்லும் கோட்சேயின் கதையாகவும், அதற்கு முன் காந்தியைச் சுட முயன்ற சாகேத் ராம் கதையாகவும் இது உருவாக்கப்பட்டிருந்தது.
ஷாருக்கான், ராணி முகர்ஜி, கிரிஷ் கர்னாட், ஓம்புரி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். 2000ம் ஆண்டில் இப்படம் உருவாகி இன்று 20 ஆண்டுகளை கொண்டாடுகிறது.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கமல் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,'ஹேராம் திரைப்படத்தைச் சரியான நேரத்தில் நாங்கள் உருவாகினோம். அது பெரும் மகிழ்ச்சி. படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஹேராம் பல்வேறு விஷயங்களை அலசியதுடன், எதிர்காலத்தில் வரும் சர்ச்சைக்கள், அச்சங்கள் குறித்துப் பேசியது. அவைகள் இன்றைக்கு உண்மையாகி வருவது வருத்தம் அளிக்கிறது. நாட்டின் நல்லிணக்கத்திற்கு இதுபோன்ற சவால்களை நாம் வென்றாக வேண்டும். நாளை நமதே' எனத் தெரிவித்துள்ளார்.