நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராகவும் விஷால் பொறுப்பு வகித்தார்.
விஷால் மீது பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்த நிலையில் விஷால் தலைமையிலான நிர்வாக குழு கலைக்கப்பட்டு இரண்டு சங்கத்துக்கும் தனி அதிகாரியைக் கொண்ட புதிய நிர்வாகிகளைத் தமிழக அரசு நியமித்தது. இதுபற்றி வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யத் தேர்தல் நடந்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் அணியாகத் தமிழ்த் திரைப்பட பாதுகாப்பு அணி டி.சிவா தலைமையில் உருவாகியிருக்கிறது. இந்த அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு ராதாரவி போட்டியிடுகிறார்.
அவர் பேசியதாவது:
என்னை வீட்டுக்கு வந்து சங்க தேர்தலில் போட்டியிடச் சொல்லி முதலில் டி.சிவா அணியினர் தான் அழைத்தனர். உடனே வந்துவிட்டேன். நடிகர் சங்கத் தலைவராக இருந்திருக்கிறேன். டப்பிங் யூனியன் தலைவராக இருக்கிறேன். தயாரிப்பாளர் சங்கத்திலும் நான் பொறுப்பில் இருந்திருக்கிறேன். இந்த தேர்தலில் போட்டியிட வேறு யாரேனும் விரும்பினால் நான் சந்தோஷமாகப் போட்டியிலிருந்து விலகத் தயார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு நல்ல நிர்வாகம் தேவைப்படுகிறது. முன்பு இருந்த நபர் இங்குப் புல் முளைக்க வைக்கிறார். ஏற்கனவே அவர் நடிகர் சங்கத்தில் புல் முளைக்க வைத்துவிட்டார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புல் முளைக்க ஆரம்பித்திருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தை கேயார் ஆரம்பித்த போது அவருடனே இருந்தவன் நான். பல நல்ல செயல்பாடு களை சங்கத்தை நிர்வாகம் செய்த ராமநாராயணன் போன்றவர்கள் செய்திருக்கின்றனர். மீண்டும் தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிர்வாகமாக இது இருக்கும். இந்த அணியில் மட்டுமல்லாமல் வெளியிலும் எனக்குத் தெரிந்து நல்லவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நான் யாரையும் தாக்கி பேசவில்லை. அணிகளாகப் போட்டியிடாமல் இரண்டு அணிகளாகப் போட்டியிட்டால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு ராதாரவி பேசினார்.