பெரிய நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் தான் சினிமா துறை வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இயக்குநர் பாரதிராஜா அளித்த நேர்காணலின் போது கூறுகையில், “உதாரணமாக ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் 30 கோடி ரூபாய் ஒதுக்குறார் என்று வைத்துக் கொண்டால் அதில் 20 கோடி ரூபாய் அளவிற்கு பெருந்தொகை நடிகர்களுக்கு கொடுக்கப்பட்டு விடுகிறது.
மீதமுள்ள தொகையில் 5 கோடி ரூபாய் அளவிற்கு மற்றவர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்டு விடுகிறது. மீதமுள்ள 5 கோடியில் தான் படமே எடுக்கப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் பெரிய நடிகர்களின் படங்கள் திருவிழா காலங்களில் தியேட்டருக்கு வரும்போது முதல் 5, 6 நாட்களில் டிக்கெட் விலையை உயர்த்தி லாபம் சம்பாதித்து விடுகின்றனர்.
லாபத்தை அதிகம் எதிர்பார்ப்பதால், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு தியேட்டரில் இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. இப்படி அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம் தோல்வியடைந்தால், தயாரிப்பாளர் நடுத்தெருவிற்கு வந்துவிடுவார். ஆனால், அதிக சம்பளம் வாங்கியவர்கள் அடுத்துப் படத்திற்கு சென்று விடுவார்கள்.
இவர்களின் சம்பளம் குறைந்தாலே பாதி சுமை குறைந்துவிடும். அதே சமயம் தயாரிப்பாளர்களும் ஜெயிக்கும் குதிரையின் மீது பந்தயம் கட்டி பழக்கமானவர்கள். அதனால், அவர்கள் பின்னாலேயே ஓடுகின்றனர். நடிகர்களும் தங்களுக்கு மார்கெட் வேல்யூ இருப்பதாக கூறி சம்பளத்தை உயர்த்துவிடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.