உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அமெரிக்கா. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருடா வருடம் அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. 93வது ஆஸ்கர் விழா வரும் பிப்ரவரி 28ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் லாக்டவுனால் பல முக்கிய படங்கள் திரைக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன. டேனியல் கிரெய்க் நடித்துள்ள, நோ டயம் டு டெய் மற்றும் வின்டிசல் நடித்துள்ள பாஸ்ட் அண்ட் ப்யூரியஷ் 9 மற்றும் மார்வெலின் பிளாக் வின்டோ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும் என்ற தகவல் இதுவரை வரவில்லை.
இதே போல் பல முக்கிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கி உள்ளன. சில படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. தியேட்டரில் வெளியிடத் தயாரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒடிடி தளத்தில் வெளியான படங்களும் இம்முறை ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் அது இன்னும் தள்ளிப்போகும் என்று தெரிகிறது. புதிய படங்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் படங்கள் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப் பட உள்ளது.
இதையடுத்து பிப்ரவரி மாதம் நடத்துவதாக இருந்த ஆஸ்கர் விருது விழா மேலும் 4 மாதங்கள் தள்ளி நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கப் பத்திரிகைகளில் தகவல் வெளியாகி இருக்கிறது.92வது ஆஸ்கர் விழாவில் தென்கொரியப் படமான பாரசைட் என்ற சிறந்த படத்துக்கான ஆச்கர் விருதைத் தட்டிச் சென்றது. இதன்மூலம் ஹாலிவுட் படம் அல்லாத வெளிநாட்டுப் படமொன்று முதன்முறையாக ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற பெருமை அப்படத்துக்குக் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கர் படத்தில் நடித்த ஜோகுயின் போனிக்ஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.