நடிகர் அர்ஜுன் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (39) கடந்த 2 வாரத்துக்கு முன்பு மாரடைப்பில் மரணம் அடைந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சார்ஜா கடைசியாக ராஜ மார்த்தாண்டா என்ற படத்தில் நடித்துள்ளார். ராம் நாராயணன் என்பவர் இயக்குகிறார்.திடீரென்று சிரஞ்சீவி சார்ஜா இறந்ததால் பட குழுவினரும் இயக்குனரும் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
சிரஞ்சீவி சார்ஜா நடித்த வேடத்துக்கு யாரை டப்பிங் அதாவது பின்னணி குரல் பேச வைப்பது என்று கவலையில் ஆழ்ந்தனர்.இது பற்றி அறிந்த சிரஞ்சீவியின் தம்பி துருவ சார்ஜா படக் குழுவினரை அழைத்து பேசினார். சிரஞ்சீவி சார்ஜா பாத்திரத்துக்குத் தான் டப்பிங் பேசுவதாகக் கூறினார். அதைப் படக் குழுவினர் ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்தனர். துருவ சார்ஜாவும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.