நயன்தாராவை போல் நானும் ஏறி மிதிச்சிட்டு வருவேன்.. நடிகை வனிதா பரபரப்பு..

Like Nayantara, I will climb and step on it: Actress Vanitha

by Chandru, Jul 24, 2020, 11:13 AM IST

நடிகை வனிதா டி.வி விஷுவல் டெக்னிஷியன் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். இது சர்ச்சையானது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன், மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதா திருமணத்தை விமர்சித்தனர். அவர்கள் நால்வரையும் திட்டித் தீர்த்த வனிதா நான்கு பேர் மீதும் போலீசில் புகார் அளித்தார். இதில் சூர்யா தேவியை நேற்று போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தன்னை குற்றம் சொல்லும் நபர்கள் கமல்ஹாசன், நயன்தாரா போன்றவர்களை ஏன் கேட்கவில்லை என்றார் வனிதா. இது சர்ச்சையானது. நயன்தாரா ரசிகர்கள் வனிதாவை விமர்சித்து நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து வனிதா பதில் அளித்திருக்கிறார். அவர் அளித்த விரிவான பேட்டி வருமாறு:
எனக்கும் என் தந்தை விஜயகுமாருக்கும் 10 வருடத்துக்கு முன் மோதல் நடந்தது. அதை இந்த தமிழகமே பார்த்தது. பிறகு 2 வருடத்துக்கு முன்பு ஒரு தகராறு நடந்தது. என் குழந்தையை யாராவது மீட்டுக் கொடுக்க வந்தார்களா? நான் அனாதை போல் நடுரோட்டில் தனியாக நின்றேன் . இப்போது என்னை விமர்சிக்கும் நடிகைகளும், இணையதளத்தில் வலம் வரும் போலி வக்கீல்கள், ஜட்ஜ்கள் என் குழந்தையை மீட்டுக் கொடுக்க வரவில்லை. ஏனென்றால் எனக்கு ஆதரவாகப் பேசினால் சினிமாவில் இருக்கும் விஜயகுமார், அருண் விஜய், ஹரி போன்றவர்களிடமிருந்து தங்களுக்குப் பட வாய்ப்பு வராது என்று வாய் மூடிக்கொண்டிருந்தார்கள்.

லட்சுமி ராமகிருஷ்ணன் அப்போதும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார். ஆனால் என்னைப் பற்றி ஏன், என்ன? என்று கூட கேட்டதில்லை. இப்போது சீர்திருத்தவாதிகள் போல் பேசுகிறார்கள். எவ்வளவோ அரசியல் தலைவர்கள் இரண்டு திருமணம் செய்திருக்கிறார்கள் அவர்களைப் பற்றிப் பேசும் தைரியம் இவர்களுக்கு இல்லை. நயன்தாராவைப் பற்றி நான் தவறாகச் சொல்லவில்லை . அவர் ஒரு பெண்ணாக இருந்தும் தன் மீது புகார் வந்தபோதெல்லாம் அதையெல்லாம் ஏறி மிதித்துவிட்டு ஒரு ஆண்போல் நிமிர்ந்து நிற்கிறார். அவரைப் போல் நானும் நிற்பேன். அந்த அர்த்தத்தில் தான் அவரைப்பற்றி குறிப்பிட்டேன்.

ஊரில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு என் பிரச்சனையை ஊதிப் பெருக்கி இருக்கிறார்கள். கஸ்தூரி இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு காரணம் அவருக்கும் எனக்கும் இருக்கும் தனிப்பட்ட பகை தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் என்னிடம் மொக்கை வாங்கிவிட்டு வெளியில் வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு யார் வந்தாலும் மொக்கை வாங்கித் தான் ஆக வேண்டும் அப்படி ஒப்புக்கொண்டு தான் போகிறார்கள். நானும் மொக்கை வாங்கி இருக்கிறேன். ஆனால் அதிலிருந்து நான் வெளியில் வந்தாலும் என் பக்கம் நியாயம் இருந்ததால் என்னை மீண்டும் நிகழச்சிக்கு மக்கள் ஆதரவுடன் அழைத்தார்கள்.

லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்றவர்கள் டிவிட்டரில் ஆயிரம், 2 ஆயிரம் பேரை வைத்துக் கொண்டு எதையாவது செய்யலாம் என்று பார்க்கிறார்கள். என்னை நம்பி தற்போது சிலர் யூடியூப் ஆரம்பித்திருக்கிறார்கள். என்னை நம்பி பிழைக்கிறார்கள் என்று எண்ணும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் இதை வைத்துப் பிழைக்கும் விதம் என்று ஒன்று இருக்கிறது. ஒருவரைத் தவறாகப் பேசி, அசிங்கமாகப் பேசி அதில் சம்பாதித்துச் சாப்பிட வேண்டுமென்றால் அதைச் சாப்பிடுவதற்குப் பதில் சாப்பிடாமல் செத்துப்போகலாம். ஒருவரை பற்றி தவறாகப் பேசுவது தவறான விஷயம். பெண்களே, பெண்களைக் கேவலப்படுத்தி கொண்டிருந்தால் எங்கிருந்து நமக்கு ஆதரவு கிடைக்கும். ஆண்கள் எப்படி பெண்களை மதிப்பார்கள்.

குறிப்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சி நடத்தி ஏதோ அவர் தான் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போல் நடந்து கொள்கிறார். அவர் எத்தனை குடும்பங்களே சேர்த்து வைத்திருக்கிறார் என்று யாருக்குத் தெரியும். அவரால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கிறது என்பது தெரியுமா? பர்சனலாகவே எனக்கு அந்த குடும்பங்களை தெரியும். எனக்கு குடும்பம் கிடையாது. எனது சகோதரர், சகோதரிகளுடன் நான் பேசாவிட்டாலும் எனது அப்பா, அம்மா வகையாறா உறவினர்களுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். இதை அவர்களா கண்டுபிடித்து சொன்னார்கள், நானே தான் சொன்னேன். பெண்களை நம்புவதை விட ஆண்களை நம்புகிறேன். எனது இணைய தள பக்கத்தில் நானே எனது நண்பர்களுடன் இருக்கும் படங்களை வெளியிட்டிருக்கிறேன். எனக்கு குடும்பம் கிடையாது. நண்பர்கள் தான் என் குடும்பம்.

லட்சுமி ராமகிருஷ்ணன் டிவிட்டரில் ஆட்களைக் கையில் வைத்துக் கொண்டு என்னைப் பற்றி தவறாக எழுதுகிறார். என்னைத் தமிழ் மக்கள் தெருவில் இழுத்து வந்து அடிப்பார்கள் என்கிறார். இணைய தளத்தில் வன்முறையைத் தூண்டுகிறார். அவர் எப்படி அவ்வாறு செய்யலாம். அவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதற்காகத் தான் புகார் கொடுத்திருக்கிறேன். என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் இவர்கள் பேசலாமா நான் தனியாக இருக்கிறேன், எனக்குப் பின்னால் யாருமில்லை என்ற தைரியமா? எனக்குப் பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இது தானா சேர்ந்த கூட்டம், அன்பால் சேர்ந்த கூட்டம் அவர்கள் என்றைக்கும் எனக்குப் பின்னால் நிற்பார்கள். நியாயம் என்றைக்கும் ஜெயிக்கும். என்னிடம் எதுவும் இல்லை எல்லாவற்றையும் சட்டத்தின் கையில் கொடுத்துவிட்டேன்.

லட்சுமி ராம கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யச் சொல்லி இருக்கிறேன். சூர்யா தேவி மீது புகார் உள்ளது. இயக்குனர் நாஞ்சில் விஜயன் என்ற ஒருவர், அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ஆனால் சூரியா தேவிக்கும் அவருக்கும் ஏதோ டீலிங் அதனால் அவர் உள்ளே வந்து என்னைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார். தயாரிப்பாளர் ரவீந்திரன் என் கணவரைப் பற்றிப் பேசுகிறார். முதலில் பெண்ணுக்கு சப்போர்ட் செய்வதுபோல் பேசினார் இப்போது பீட்டர் பாலை நீ ஆம்பளையா என்று கேட்கிறார். கேமிரா முன்னால் உட்கார்ந்து பேசுறதுதான் ஆம்பளத்தனமா, நேரில் வந்து பேசு. நான் யூடியூப் சேனல் ஓனராக இருக்கிறேன். எனக்கு சப்ஸ்கிரைப்பர்கள் இருக்கிறார்கள். என்னை யூடியூபிலிருந்து நீ யாரும்மா? என்று மெசேஜ் போட்டு விசாரிக்கிறார்கள். உன்னைப்பற்றி இவ்வளவு ஹேஷ் டேக் வருகிறதே பலமான ஆளாக இருக்கிறீர்களே என்று கேட்கிறார்கள்.

இதைப்பார்த்து அழுவதா, சிரிப்பதா, பெருமைப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.
பீட்டர் பாலை நான் விலை கொடுத்து வாங்கவில்லை காதல் தான் எங்களைச் சேர்த்து வைத்தது. அவரது மனைவி, குழந்தைகளையும் அவர் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தயாரிப்பாளர் என்றோ அல்லது பணக்காரர் என்றோ நான் கல்யாணம் செய்யவில்லை. எனக்கு யார் பணமும் தேவை இல்லை. இரண்டு விவாகரத்து செய்திருக்கிறேன் யாரிடமும் எந்த நிவாரணமும் நான் வாங்கவில்லை. கையில் போட்டிருந்து மோதிரத்தைக்கூடக் கழற்றி கொடுத்து விட்டுத் தான் வந்தேன். எனக்கு யார் பணமும் தேவை இல்லை. என்னால் பிழைத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு வனிதா கூறினார்.

You'r reading நயன்தாராவை போல் நானும் ஏறி மிதிச்சிட்டு வருவேன்.. நடிகை வனிதா பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை